முஸ்லிம் சமூகத்திற்கெதிரான துன்பங்கள் இன்னும் தொடர்ந்த வண்ணமுள்ளது – ரிஷாட்

(UDHAYAM, COLOMBO) – தலைதூக்கியுள்ள இனவாதத்தை கட்டுப்படுத்தாமல் முஸ்லிம் இளைஞர்களையும் ஆயுதம் ஏந்தத் தூண்டி நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடுவதற்கு வழியேற்படுத்த வேண்டாமென வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று பாராளுமன்றில் இடம்பெற்ற ஜெனீவா பிரேரணை குறித்து சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் முஸ்லிம்களின் பொறுமையை இனியும் சோதிக்க வேண்டாமென சுட்டிக்காட்டிய அவர், இனியும் பொறுமைகாக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

“முஸ்லிம்களின் பொறுமையை இனியும் சோதிக்காதீர்கள், முஸ்லிம் இளைஞர்களை ஆயும் தூக்க வைத்து இன்னுமோர் இரத்த ஆறு ஓடுவதற்கு வழி செய்யாதீர்கள் நாங்கள் இவ்வளவு நாளும் பொறுத்தது போதாதா? இறைத்தூதரையும் முஸ்லிம்களின் வாழ்க்கை முறையையும் தொடர்ந்தும் கேவலப்படுத்தி பழி சொல்லி வரும் மதகுரு ஒருவரினதும் அவரைச் சூழ்ந்திருக்கும் திருடர்களினதும் கேவலங்கெட்ட செயலை தொடர்ந்து அனுமதித்து வருகின்றீர்கள்.

அந்த மதகுருவுக்கெதிராக எத்தனையோ முறைப்பாடுகள் இருந்தும் அவரைக் கைது செய்வதற்கு பின்னடிக்கின்றீர்கள். அவரைக் கைது செய்வதற்கென நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்னும் பூச்சாண்டி காட்டி வருவது வெட்கமாயில்லையா?

ஆனால் இன்னும் கைது நாடகம் தான் தொடர்கின்றதே ஒழிய அவரைக் கைது செய்ய மறுக்கிறார்கள். அவர் ஒழிந்திருக்கின்றதாக பம்மாத்துக் காட்டுகிறார்கள். பொலிஸ் மா அதிபருக்கே சவால் விட்டுக் கொண்டு சட்டத்தையும் கையிலெடுத்து அவர் தான் நினைத்தபடி ஆடி வருகின்றார்.

திறமையான புலனாய்வுப் பிரிவு நமது நாட்டில் இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் இந்த மத குரு இருக்கும் இடத்தை அவர்களால் கண்டு பிடிக்க முடியாமல் இருப்பது தான் வெட்கமாக இருக்கின்றது. முஸ்லிம் சமூகத்திற்கெதிரான துன்பங்கள் இன்னுமே தொடர்ந்த வண்ணமுள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறுவனத்தை எரித்தும் அழித்தும் வருகின்றார்கள். சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன. ஆனால் இவற்றை முறையிடும் போது பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறப்படுகின்றதே ஒழிய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதாக இல்லை. நாசகாரிகளை உங்களால் ஏன் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது எங்களுக்கு வேதனையும் இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *