தொழிற்சாலைகளில் பால் உற்பத்தியை அதிகரிக்க தீர்மானம்

(UDHAYAM, COLOMBO) – தொழிற்சாலைகளில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு மில்க்கோ கம்பனி தீர்மானித்துள்ளது.

இதன் அடிப்படையில், அம்பேவெல பால் உற்பத்தி தொழிற்சாலையில் உற்பத்திக் கொள்ளளவு திறனை நான்கு லட்சம் லீற்றர்களாக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மில்க்கோ நிறுவனத்தின் தலைவர் கீர்த்தி மிஹிரிபென்ன தெரிவித்தார்.

இந்தத் தொழிற்சாலையின் சமகால உற்பத்தித் திறன் இரண்டு லட்சம் லீற்றர்களாகும். இருந்த போதிலும், இரண்டு லட்சத்து 75 ஆயிரம் லீற்றர் பாலை பாற்பண்ணையாளர்கள் தொழிற்சாலைக்கு தினமும் வழங்கி வருகின்றனர். இந்த கொள்ளளவை முழுமையாக கொள்வனவு செய்யும் கம்பனி அதன் ஒரு பகுதியை பெலவத்த பாற்பண்ணை கம்பனிக்கு அனுப்பி வைக்கின்றது.

தொழிற்சாலையின் உற்பத்திகளின் சுகாதார தரத்தை பேணுவதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்தத் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பெருமளவு பால் உற்பத்திகள் வீண் விரயம் செய்யப்படுவதாக வெளிவந்த பத்திரிகை செய்தியொன்றை மில்க்கோ நிறுவனத்தின் தலைவர் முற்றாக நிராகரித்துள்ளார். இது உண்மைக்குப் புறம்பான செய்தியாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாற்பண்ணையாளர்களிடமிருந்து பெறப்படும் பாலின் கொள்ளளவை நிறுவனத்தால் மட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஏனெனில் அத்தகைய ஒரு செயற்பாடு பாற்பண்ணைகளின் தயாரிப்புகளுக்கு அநீதியை ஏற்படுத்தும் என்று திரு கீர்த்தி மிஹிரிபென்ன மேலும் தெரிவித்தார். பாற் பண்ணையாளர்களின் ஒரு லீற்றர் பாலுக்கு 67 ரூபா எனும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட விலை தற்சமயம் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *