(UDHAYAM, COLOMBO) – இந்தியா – கர்நாடகாவில் தலித் இளைஞரைத் திருமணைம் செய்ததால் 21 வயது கர்ப்பிணிப் பெண்ணை அவரது குடும்பத்தாரே எரித்து கொன்றுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பிஜபூர் மாவட்டத்தில் உள்ள குண்டகனாலா கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது இளம் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு உயிரிழந்த பெண்ணுக்கும் 24 வயதான இளைஞர் ஒருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
இருவரும் கடந்த ஜனவரி மாதம் கோவாவில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனையடுத்து இருவரும் வெளிமாநிலத்திலேயே தங்கியிருந்த நிலையில் குடும்பத்தாரின் கோபம் தீர்ந்திருக்கும் என்று எண்ணி கடந்த சனிக்கிழமை சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.
எனினும் குறித்த பெண்ணை அவரது குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை. அவருக்கும் குடும்பத்தினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.
பெண்ணின் பெற்றோர், கணவரை விட்டு விட்டு வருமாறு விரும்பினர். அந்த இளைஞரின் தந்தையும் இந்த ஜோடியை ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில் குறித்தப் பெண்ணின் குடும்பத்தார் கடுமையாக தாக்கியதால் இது குறித்து புகார் அளிக்க அந்த இளைஞர் காவல் நிலையம் சென்றுள்ளார்.
இந்த நேரத்தில் அந்த பெண்ணை அவரது குடும்பத்தார் எரித்து கொன்றுள்ளனர். இளைஞர் திரும்பி வந்தபோது எரிந்த நிலையில் அவரது மனைவி கிடந்துள்ளார்.
மேலும் அவரது உடல் பல முறை கத்தியால் குத்தப்பட்டும் இருந்தது காவற்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாற்று மதத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்ததால் பெற்றோரே மகளை எரித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் பானுபேகம் எரித்து கொல்லப்படும் போது கர்ப்பிணியாக இருந்துள்ளார். ஈவு இரக்கமற்ற முறையில் பெண்ணை எரித்துக் கொன்ற பெண்ணின் தாய், சகோதரன், தங்கை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.