தேசிய பௌத்த புத்திஜீவிகள் சபை – ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – தேசிய பௌத்த புத்திஜீவிகள் சபை மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும்  கிடையிலான சந்திப்பு நேற்று  பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

வண. பேராசிரியர் கொடபிட்டியே ராகுல அனுநாயக்க தேரர், வண. பேராசிரியர் கல்லேல்லே, சுமனசிறி தேரர், வண. கலாநிதி அக்குருடியே நந்த தேரர் உள்ளிட்ட தேசிய பௌத்த புத்திஜீவிகள் சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் மகா சங்கத்தினர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

பௌத்த புத்திஜீவிகள் சபை செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், பௌத்த புத்திஜீவிகள் சபையின் தீர்மானங்கள் உரியவாறு செயற்படுத்தப்படுதல் தொடர்பாக மகா சங்கத்தினர் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.

அண்மைக்காலமாக பிரிவெனாக் கல்வியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி பாராட்டு தெரிவித்தார்.

பிரிவெனா ஆசிரியர்களுக்கான பயிற்சி நிலையத்தை நிறுவும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளமைக் குறித்தும் மகா சங்கத்தினர் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும், பௌத்த கல்வியின் மத்திய நிலையமாக இலங்கையை கட்டியெழுப்புதல் தொடர்பாகவும் விசேடமாக கலந்துரையாடப்பட்டதுடன், அதற்கான வசதிகளை மேம்படுத்தவும், உயர் கல்வி நிலையங்களில் கல்வி கற்பதற்காக வருகைதரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வீசா வழங்குதல் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

சமய கல்விக்காக ஆசிரியர்களை இணைத்துக்கொள்ளல், புத்த ஜயந்தி திரிபீடக நூல்தொகுதியை மகா நாயக்க தேரர்களின் அங்கீகாரத்துடன் நியமிக்கப்பட்ட புத்திஜீவிகள் குழுவினரால் சரிபார்க்கப்பட்டதன் பின்னர் இணையத்தளங்களில் வெளியிடுதல், ஓலைச்சுவடிகளைப் பாதுகாத்தல், பிக்குகளுக்கான கல்வி நிலையங்களை பிரிவெனாக்களாக கட்டியெழுப்புதல் மற்றும் அவற்றின் தரத்தை உயர்த்துதல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

புத்தசாசன அமைச்சின் செயலாளர் சந்ரபேம கமகே, பௌத்த மத அலுவல்கள் ஆணையாளர் நாயகம் நிமல் கொடவலகெதர ஆகியோரும், கல்வி அமைச்சின் அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *