காலம் கடந்த சிகிச்சையே டெங்கு உயிரிழப்பு அதிகரிக்க காரணம்

(UDHAYAM, COLOMBO) – டெங்கு நோயினால் ஏற்படும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணம் காலங்கடந்த சிகிச்சையே ஆகும்.

இதற்கான வைரஸ் உடலுக்குள் உட்சென்று பல நாட்கள் சென்ற பின்னர் உரிய சிகிச்சையை பெற்றுக்கொள்ளாமையினாலேயே டெங்கு நோயின் காரணமாக அதிகளவில் உயிரிழப்பு இடம்பெறுகின்றது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்தார்.

சர்வதேச சனத்தொகை நாளினை முன்னிட்டு சுகாதார கல்வி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

டெங்கு வைரஸ் உடலினுள் உட்சென்று பல நாட்கள் செல்வதனால் இரத்தத்தில் பாதிப்பை ஏற்படுத்திய பின்னர் சிகிச்சைக்காக வைத்தியசாலையை நாடுகின்றனர். இதனாலேயே மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக குறிப்பிட்ட அவர் இந்த நிலையை தடுப்பதற்கு காய்ச்சல் ஏற்பட்ட 2 நாட்களுக்கு பின்னர் இரத்தத்தை பரிசோதித்து கொள்வதில் கவனம் செலுத்தவேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்

மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பதற்கு காரணம் டெங்கு நோய் ஏற்பட்டு 5 நாட்கள் வரையிலும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளாமையே ஆகும் என்று அவர் குறிப்பிட்டார்.

டெங்கு நோயை தடுப்பதற்கு நுளம்புகளை விரட்டுவது மாத்திரம் போதுமானதல்ல நுளம்புகள் பெருகாமல் சூழலை சுத்தமாக வைத்திருப்பதற்கு தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

நுளம்புகள் பெருகும் இடங்களை சுத்தமாக வைத்திருப்பதற்கு பாமர மக்கள் வாழும் இடங்கள் முதல் செல்வந்தர்கள் உள்ள இடங்கள் வரையில் இதற்கான பங்களிப்பு அவசியமானதாகும்.

தமது இருப்பிடங்களில் உரிய சுகாதார வசதிகளை மேற்கொள்ளப்படுமாயின் டெங்கு நோயை நாம் வெற்றிகொள்ள முடியும் என்றும் டொக்டர் ஜயசுந்தர பண்டார மேலும் தெரிவித்தார்.

இந்த வருடத்தில் ஜனவரி மாதம் தொடக்கம் 80,000 க்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *