“மரத்துக்கும், யானைக்கும் வாக்களித்து மரத்துப்போன கைகள் மயிலுக்கு வாக்களிப்பதிலேயே தற்போது ஆர்வம்” – அமைச்சர் ரிஷாட்

(UTV|COLOMBO)-மரத்துக்கும் யானைக்கும் வாக்களித்துப் பழகிப்போன கைகள் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் மயிலின் பக்கம் திரும்பியுள்ளதால் மக்கள் காங்கிரஸ் பல உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும் என்பதில் தமக்கு நம்பிக்கை இருப்பதாக அக்கட்சியின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் திருகேணமலை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு நேற்று முன்தினம் (01) திருமலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

திருகோணமலை மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் 10 சபைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மயில் சின்னத்தில் முதன்முறையாக களமிறங்குகின்றது. மரத்துக்கும் யானைக்கும், வாக்களித்துப் பழக்கப்பட்ட இந்த பிரதேச மக்கள், மயிலுக்கு அமோக ஆதரவை வழங்கி வருவது கண்டு மகிழ்ச்சியடைகின்றோம். அதுவும் சிங்கள, தமிழ், முஸ்லிம்களை உள்ளடக்கிய வேட்பாளர்கள் எமது கட்சியில் போட்டியிடுவது சிறப்பம்சமாகும்.

திருமலை மாவட்டத்தில் கடந்த காலங்களில் யானையும், மரமும் எதுவுமே செய்யாத நிலையில் இந்தப் பிரதேச மக்கள் எமக்கு ஆதரவு வழங்குகின்றனர்.

அலையலையாக ஆதரவுகள் தென்பட்டாலும், தேர்தலின் வாக்களிப்பு நேரம் வரை அதனை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். மக்கள் சேவைக்கு புறப்பட்ட எம்மிடம் “நான்” என்ற அகம்பாவம் குடிகொண்டு விட்டால், அது எமக்கு பாதகமாகவே அமையும். பணிவும், அடக்கமும் இருந்தாலே நாம் இந்த பயணத்தை வெற்றிகொள்ள முடியும்.

யுத்தத்தின் கோரப்பிடிக்குள் சிக்கிப் பரிதவிக்கும் இந்த மக்களை, கடந்த காலங்களில் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள், இந்த மக்களுக்கு எவ்விதமான நன்மைகளையும் செய்யவில்லை என்பதே உண்மை. நாம் எதிர்நோக்கவுள்ள இந்த உள்ளூராட்சித் தேர்தலில் கிழக்கு மாகாண மக்களாகிய உங்களின் எதிர்காலம், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் ஆகியவை தங்கியுள்ளன.

கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும், ஜனாதிபதி தேர்தலிலும் இலங்கையின் அநேகமான கட்சிகள் ஒரு குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு தேர்தலில் ஈடுபட்டனர். அதற்காக தமது நேரம், காலம், பணம், சக்தி ஆகியவற்றை எல்லாம் செலவிட்டனர். ஆனால், இந்தத் தேர்தல் அதற்கு மாற்றமாக, ஒருமித்து நின்ற கட்சிகள் எல்லாம் தனித்தனியாக வேறாகி தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஏனெனில், ஒவ்வொரு பிரதேச மக்களும் தத்தமது பிரதேசங்களின் வளத்தைப் பெருக்கிக்கொண்டு, மக்களின் அடிநாதப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதில் முனைப்புக் காட்டுகின்றனர்.

ஒருமித்துச் செயற்பட்ட கட்சிகள் பல கூறுகளாகப் பிரிவடைந்து தனித்து போட்டியிடுவதால், இந்தத் தேர்தலில் நாங்கள் எவ்வாறு வெற்றிபெற முடியும் என்பதை திட்டமிட்டு செயலாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

தேர்தல் காலங்களிலே அடுத்த கட்சி வேட்பாளர்கள் மீது அபாண்டங்களைப் பரப்பி, பொய்களைக் கூறி, வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் கடந்தகால அரசியல் கலாச்சாரத்துக்கு நமது கட்சி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நடக்கக் கூடிய விடயங்களுக்கு மாத்திரமே வாக்குறுதி அளித்தால் அது நமது வெற்றிக்கு பெரிதும் உதவும்.

சிறுபான்மைச் சமூகம் குறிப்பாக, மலையக தமிழர்களும், முஸ்லிம்களும் அரசியல் முறை மாற்றங்களில் பாரிய ஆபத்துக்குள் சிக்கிக் கொண்டிருப்பதாகவே நாங்கள் உணர்கின்றோம்.

தீர்வுத் திட்டத்திலே எமது சமூகத்தின் அரசியல் இருப்பு, பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு ஆகியவை தொடர்பில், எமது கட்சிக்கு தெளிவான நிலைப்பாடு உண்டு. அதனை நடைமுறைப்படுத்தும் திட்டங்களையும் நாம் முன்வைத்துள்ளோம். தேர்தல் முறை மாற்றத்திலும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதிலும் சிறுபான்மை மக்களுக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்களை சுட்டிக்காட்டி, தீர்வில் அதற்கான பரிகாரங்களை எமது கட்சி முன்வைத்துள்ளது.

அது மாத்திரமின்றி தற்போது நமது சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள பாரிய பிரச்சினையாக காணிப் பிரச்சினை உருவெடுத்துள்ளது. இந்த மாவட்டத்திலே அநேகமான இடங்களில் காணிகள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன. இவற்றுக்கெல்லாம் இற்றை வரை தீர்வு கிடைக்கவில்லை. படித்த இளைஞர்கள் முறையான தொழிலின்றி வீதிகளில் அலைவதை நாம் காண முடிகின்றது. இந்தப் பிரதேசத்தில் கடந்த காலத்தில் அரசியல் செய்தவர்கள் இருக்கின்ற பிரச்சினைகளை அதிகரித்தார்களே தவிர தீர்வு பெற்றுக் கொடுக்கவில்லை. ஆனால், எமது கட்சியிடம் இதற்கான சிறப்பான தீர்வுகள் இருக்கின்றன.

“உள்ளூராட்சித் தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது, தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேசுகின்றார் என்றால், அதற்கான அர்த்தம் என்ன? இந்தத் தேர்தலின் மூலம் ஆட்சித் தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ள பீதியை நாம் விளங்கிக்கொள்ள முடிகின்றது அல்லவா?

சிறுபான்மைச் சமூகத்தின் தியகாத்தினாலும், அர்ப்பணிப்பினாலும் உருவாக்கப்பட்ட புதிய ஆட்சியாளர்கள் சில சந்தர்ப்பங்களில் நன்றிகெட்ட தனமாக நடந்துகொள்கின்றனர். ஏறிய ஏணியை எட்டி உதைக்கும் துரதிஷ்ட நிலையைக் காண்கிறோம்.

மக்கள் காங்கிரஸ் மூவின மக்களையும் பிரதிநிதித்துவபடுத்தும் கட்சி என்பதை கடந்த காலங்களில் நிரூபணம் ஆக்கியுள்ளது. வடமாகாண சபைத் தேர்தலில் வன்னியில் எமது கட்சியில் போட்டியிட்ட சிங்களச் சகோதரர் ஒருவரை, இஸ்லாமிய சகோதர்களும், தமிழ் சகோதரர்களும் இணைந்து  அவரைப் பிரதிநிதியாக ஆக்கியமை இதற்கு சான்றாகும். வெளிமாவட்டங்களில் உள்ளவர்கள் எங்களை இனவாதிகளாக சித்தரித்தாலும், வன்னி மாவட்டத்தில் வாழ்பவர்களுக்கு எம்மைப் பற்றி நன்கு தெரியும்.

முறையான செயல்திட்டத்தின் மூலம் அபிவிருத்திப் புரட்சியை ஏற்படுத்தி, அடுத்த தேர்தலில் மக்கள் காங்கிரஸ் வந்து வாக்குக் கேட்காமலேயே, மக்கள் பிரதிநிதிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நல்லதோர் எண்ணத்திலேயேதான் நமது கட்சி தனித்துப் போட்டியிடுகின்றது. எல்லா செயற்பாடுகளும் இறைவனை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படுவதால், இந்தக் கட்சி  சிறந்த முறையில் மக்கள் பணியைத் தொடரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று அமைச்சர் கூறினார்.

கட்சியின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், செயலாளர் எஸ்.சுபைர்தீன் மற்றும் கட்சியின் தவிசாளரும், பிரதியமைச்சருமான அமீர் அலி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/01/26112283_1958160700866782_2846679158698798242_n.jpg”]

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *