“கண்முன்னே தெரியும் அபிவிருத்திகளை மூடி மறைத்து கண்ணைப் பொத்திக்கொண்டு மேடைகளிலே பொய்களைக் கூறி வருகின்றனர்” அமைச்சர் ரிஷாட்

(UTV|COLOMBO)-முசலிப் பிரதேசத்தில் கண்முன்னே தெரியும் அபிவிருத்திகளையும் நாம் மேற்கொண்டு வரும் மக்கள் நலப்பணிகளையும் மூடிமறைத்து, அம்பாறை முஸ்லிம் காங்கிரஸ் மேடைகளில் கண்ணைப் பொத்திக்கொண்டு, எந்தவிதமான அபிவிருத்திப் பணிகளும் இந்தப் பிரதேசத்தில் இடம்பெறவில்லை என்று இந்தப் பிரதேசத்தைச் சார்ந்த அரசியல்வாதி ஒருவர் தூற்றிவருவதானது வெட்கக்கேடான விடயம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

முசலிப் பிரதேச சபை தேர்தலில் மறிச்சுக்கட்டி வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் சுபியானை ஆதரித்து மறிச்சுக்கட்டியில் இன்று காலை (17) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது,

இந்தப் பிரதேசத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்னர், நமது பூர்வீகக் காணிகள் காடாகின. மக்கள் வசிக்காத காரணத்தினால், கட்டிடங்கள் உருக்குலைந்து போயின. பள்ளிவாசல்கள் அமைந்துள்ள இடம் சேதமடைந்த மதில்களுடன் மட்டுமே காட்சியளித்தது. வீடுகள் முற்றாகத் தகர்ந்து கிடந்தன. அழிந்துபோன அத்தனை இடங்களையும் மூன்று வருட காலங்களில் முடிந்தளவில் நாங்கள் கடியெழுப்பியது உங்கள் மனச்சாட்சிக்கு நன்கு தெரியும். நன்றியுள்ளவர்கள் மறக்கப் போவதில்லை.

யுத்தம் முடிந்து சமாதானம் ஏற்பட்ட பின்னர் நீங்கள் இந்தப் பிரதேசத்துக்கு வந்தபோது, காடுகளைத்தான் பார்த்திருப்பீர்கள். பாதைகளில் முற்காடுகளும், பற்றைக்காடுகளும் நிரம்பிக் காணப்பட்டன. மீள்குடியேறி வாழ்வதற்கு வீடுகள் இருக்கவில்லை.. இறைவணக்கத்துக்கு பள்ளிவாசல்கள் இருக்கவில்லை. மீளக்குடியேறியவர்கள் வீடில்லாது கொட்டில்களிலே நீர் வசதியின்றி வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலையே இருந்தது. எனினும், இறைவனின் துணையுடனும், எமது அயராத முயற்சியினாலும் பாடசாலைகளை அமைத்தோம். பாடசாலைகளை அமைப்பது இலேசான காரியமாக இல்லாதபோதும், ஒரே நாளில் பல பாடசாலைகளை அமைத்து சாதித்திருக்கின்றோம். கட்டிடங்களைக் நிர்மாணித்தோம். பள்ளிவாசல்களை புதிதாகக் கட்டினோம். மின்சாரமே இல்லாத இந்தப் பிரதேசத்தில் மின்சார வசதிகளை ஏற்படுத்தினோம். குடிநீர் வசதி வழங்கினோம். அன்றாடம் சீவியம் நடத்துவதற்கு தொழிலின்றி கஷ்டப்பட்டோருக்கு வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றோம்.

எமக்கிருந்த தொடர்பையும், நட்பையும் பயன்படுத்தி வெளிநாட்டுப் பரோபகாரிகளின் உதவியுடன் முடிந்தளவு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டோம். இன்னும் செய்து வருகின்றோம்.

இவ்வாறு நாம் மேற்கொண்ட சேவைகளை பொறுக்கமாட்டாது கையாலாகாதவர்கள் இனவாதிகளிடம் எங்களை காட்டிக்கொடுக்கின்ற படலத்தை இந்த மண்ணிலிருந்துதான் சிலர் ஆரம்பித்தனர் என்பதை வேதனையுடன் கூற விரும்புகின்றேன். எமது மண்ணையும், இந்த மண்ணை நேசிக்கும் மக்களையும் காட்டிக்கொடுக்கின்ற அசாதாரண அரசியலை அவர்கள் அரங்கேற்றி வருகின்றனர்.

நமது வாக்குகளினாலும், தியாகங்களினாலும், அர்ப்பணிப்பினாலும் உருவாக்கப்பட்ட எம்முடன் இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், மாற்றுக் கட்சியில் இருந்துகொண்டு இல்லாத பொல்லாத கதைகளை பரப்பி வருகின்றார்.

முசலி மண்ணில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பெற்றுக்கொள்வதற்கு நாங்கள் பட்ட கஷ்டங்கள் உங்களுக்கு தெரியாதவை அல்ல. இறைவனின் உதவியினாலும் உங்களின் வாக்குகளினாலும், எமது பிரயத்தனங்களினாலும் பாராளுமன்ற உறுப்பினராகி வெளியுலகத்துக்கு அடையாளப்படுத்திய அவர், இப்போது வேறு பிரதேசங்களுக்குச் சென்று மேடைகளிலே நின்று எம்மைக் கொச்சைப்படுத்தி வருகிறார்.

முசலி பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இழக்கப் போவதாக கதைகளைக் கூறி, முஸ்லிம் காங்கிரஸ்தான் முசலியில் ஆட்சியமைக்கும் அதனால்தான் அம்பாறையில் கால் வைத்துள்ளர்கள் என்றும் இவர்கள் வேடிக்கையான கதையை கூறி வருகின்றனர்.

கடந்த பொதுத் தேர்தலிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமை தோல்வியைச் சந்திக்குமென இவர்கள், சந்திக்குச் சந்தி கூறியபோதும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் அமோக வெற்றி பெற்றோம்.

மர்ஹூம் அஷ்ரப் கட்சி ஆரம்பித்து, அதன் பின்னர் வந்த பொதுத் தேர்தலில் எல்லாம் வன்னி மாவட்டத்தில் ஓர் ஆசனத்தையும், பின்னர் இரு ஆசனங்களையும் பெற்றுக்கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலில் நான்காயிரம் வாக்குகளுக்குக் குறைவாகப் பெற்றதை நான் மீண்டும் பகப்படுத்த்வ்து பொருத்தமானது என நினைக்கின்றேன். எங்களை வீழ்த்த நினைத்தவர்கள் மூக்குடைபட்டு சென்றார்கள். இறைவன் எங்களுடனே இருந்ததன்.

முசலி மக்கள் நன்றியுள்ளவர்கள். இறைவனுக்குப் பயந்தவர்கள். மனச்சாட்சியுடனும், நேர்மையுடனும் வாழ்பவர்கள். எங்களது அரசியல் பயணத்தில் அவர்கள் இணைந்திருக்கின்றார்கள். அந்த மக்களுக்காக இனவாதிகளுடன் நாங்கள் நடாத்தி வரும் போராட்டங்களை இந்தத் தேர்தலில் அவர்கள் நினைத்துப் பார்ப்பார்கள். முசலிப் பிரதேசத்தை மீட்டெடுப்பதற்காக, இந்த மண்ணை காப்பற்றுவதற்காக நாங்கள் இனவாதிகளுடன் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றோம். நீதிமன்றத்திலும் எம்மை நிறுத்தியுள்ளார்கள். இந்த மண்ணை மீட்டெடுப்பதற்காக எத்தனையோ வழக்குகளுக்கு நாம் முகங்கொடுத்து வருகின்றோம். எனினும், நாம் மனம் தளர்ந்துவிடவில்லை.  இற்றைவரையில் நாம் ஓர் அங்குல நிலத்தையேனும் விட்டுக்கொடுக்காமலேயே போராடி வருகின்றோம்.

எனினும், எம்மைக் காட்டிகொடுத்தவர்கள் இன்னுமே தூற்றிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். அப்பட்டமான பொய்களை இவர்கள் பரப்பி எவரையோ திருப்திப்படுத்த நினைக்கின்றார்கள் என்று அமைச்சர் கூறினார்.

 

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/01/min-1.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/01/MIN-3.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/01/MIN-4.jpg”]

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *