(UDHAYAM, USA) – அமெரிக்காவில் 4 வயது சிறுமி பல் தேய்க்காததால், ஆத்திரமடைந்த அச்சிறுமியின் தாய், சிறுமியின் வயிற்றில் உதைத்ததில் அந்தச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில், ஐரிஸ் ஹெர்னாண்டஸ் என்பவர் தனது நோஹ்லி அலெக்ஸாண்ட்ரா என்ற 4 வயது மகளுடன் வசித்து வருகிறார்.
நேற்று காலை அச்சிறுமி குளியறையில் மயங்கி விழுந்ததாககூறி, அவளது தாய் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த அச்சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அச்சிறுமியின் உடலில் பல காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் காவற்துறைக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்திய காவற்துறையினர், சிறுமியின் தாயார் நடத்திய நாடகத்தை கண்டறிந்தனர்.
காலை எழுந்தவுடன் அச்சிறுமி பல் தேய்க்காமல் இருந்ததைப் பார்த்த அச்சிறுமியின் தாயார் ஆத்திரமடைந்து சிறுமியின் வயிற்றில் எட்டி உதைத்துள்ளார்.
இத்தாக்குதலால், நிலைகுழைந்த அச்சிறுமி சுவரின் மீது மோதி தலையில் அடிபட்டு மயங்கி விழுந்துள்ளாள். உடனே பயந்து போன அச்சிறுமியின் தாயார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
சிறுமியின் மீது தாக்குதல் நடத்தி கொன்றதற்காக அச்சிறுமியின் தாயார் மீது வழக்குப்பதிவு செய்த காவற்துறையினர் அடுத்த கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.