நைஜீரியாவில் குழந்தைகள் தொழிற்சாலை முற்றுகை

(UTVNEWS|COLOMBO) – நைஜீரியா லாகோஸில் குழந்தை தொழிற்சாலை என அடையாளப்படுத்தப்படும் பகுதியிலிருந்து 19 கர்ப்பிணிப்பெண்களை அந்நாட்டு பொலிஸார் மீட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நைஜீரியாவில் பெண்களை கடத்தி கர்ப்பமாக்கி குழந்தைகள் பிறந்த பின்னர் அக் குழந்தைகளை பணத்திற்காக விற்பனை செய்யும் குழந்தைகள் தொழிற்சாலையொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

அங்கிருந்து 19 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர் என நைஜீரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்களுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகளை 1400 டொலர்களுக்கும் பெண் குழந்தைகளை 800 டொலரிகளிற்கும் விற்றுள்ளனர்.

பிறந்த குழந்தைகள் யாருக்கு விற்கப்பட்டுள்ளன என்பது குறித்த தகவல்கள் இதுவரை சிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் இருந்து 19 முதல் 25 வயதுடைய இளம் பெண்களே மீட்கப்பட்டுள்ளதுடன், குறிப்பிட்ட பெண்களை வேலை வாய்ப்பு என்ற போர்வையில் இந்த இடத்திற்கு கொண்டுவரப்பட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டனர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பேரூந்து நிலையத்தில் என்னை அழைப்பதற்காக வந்த பெண்ணொருவர் என்னை இங்கு கூட்டி வந்தார் என மீட்கப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ளார். மறுநாள் இந்த இடத்திற்கு பொறுப்பான பெண்ணொருவர் என்னை அழைத்து அனுமதியின்றி வெளியில் செல்லவேண்டாம் என உத்தரவிட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

”பல ஆண்களுடன் என்னை பாலியல் உறவில் ஈடுபடச்செய்தனர். நான் கர்ப்பிணியானதும் குழந்தை பிறந்த பின்னர் எனக்கு பெருமளவு பணத்தை வழங்கினர்.” என்று பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நைஜீரியாவில் இவ்வாறான குழந்தை தொழிற்சாலைகள் வழமையான விடயம் என உள்ளுர் வாசிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் அறிக்கையிட்டுள்ளன. இவ்வாறான குழந்தை தொழிற்சாலைகளில் இந்த வருடம் 160 குழந்தைகளை காவல்துறையினர் மீட்டு;ள்ளனர். இந்த குற்றச்செயல் தொடர்பில் பயிற்றுவிக்கப்படாத இரு தாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள காவல்துறையினர் எனினும் முக்கிய குற்றவாளிகளை இன்னமும் கைதுசெய்யவில்லை என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *