வளமான நாட்டை கட்டியெழுப்பும் வகையில் புத்தாண்டு அமையட்டும்

(UTV|COLOMBO) – வளமான நாட்டை கட்டியெழுப்பும் வகையில் புதிய ஆண்டில் செயற்படவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

புதுவருடத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அதனுடன் இணைந்து புதிய பாராளுமன்ற அரசாங்கம் நிறுவப்பட்டு தற்போது அது தனது பணிகளை ஆரம்பித்துள்ளது. இந்த ஆட்சி மாற்றத்துடன் புதியதொரு இலங்கை தொடர்பான எதிர்பார்ப்பு எமது இளம் சந்ததியினர் மத்தியில் பரவிக் காணப்படுகிறது.

அரசாங்கத்தின் எந்தவிதமான தலையீடுமின்றி நாடு முழுவதும் இளைஞர், யுவதிகள் தாமாக முன்வந்து தமக்கு மத்தியிலான ஒரு ஒழுங்கமைப்பினூடாக புதியதொரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தலைமைத்துவத்தினை ஏற்றுள்ளமை இந்த அலையின் முக்கிய அடையாளமாகும்.

நாடு முழுவதும் பொது இடங்களில் சுவர்களைச் சுத்தம் செய்து, அவற்றில் மனங் கவரும் ஓவியங்களை வரையும் பணிகளில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளதை நாம் அவதானிக்கிறோம்.

இதனூடாக சில நாட்களிலேயே முழு இலங்கையும் மாற்றமடைந்தது. இன்னும் சில இளைஞர் குழுக்கள் இவ்வாறு சுயமாக முன்வந்து விவசாய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக சமூக ஊடகங்களில் ஆங்காங்கே காணக் கிடைத்தது. சமூக வலையமைப்புகள் மூலம் ஏற்படும் தொடர்புகள் ஊடாகவே இந்த அனைத்தும் இடம்பெறுகின்றன. தமது நாட்டைத் தாமே முன்னேற்றுவது எனும் திடசங்கற்பத்துடன் ஏற்பட்ட இந்த இளைஞர்களின் உற்சாகம் புதிய தசாப்தத்தை நோக்கிச் செல்லும் எமக்கு பெறுமதியான வளமாகக் காணப்படுகிறது.

இதற்கு முன்னர் புலிப் பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கும் இளைஞர்கள் மத்தியில் இவ்வாறான உற்சாகம் ஏற்பட்டது. அன்று இருந்த இளைஞர்களின் உற்சாகம் புலிகள் அமைப்பினைத் தோற்கடிக்கும் வரை ஓய்ந்து போகவில்லை. இன்று நாட்டைக் கட்டியெழுப்புவது தொடர்பாக ஏற்பட்டுள்ள ஆர்வத்துடன் செயலாற்றும் இளைஞர் சந்ததியினரும் தாம் எதிர்பார்க்கும் சுபீட்சமான தேசமொன்றைக் கட்டியெழுப்பும் வரை ஓய்ந்து விட மாட்டார்கள் என நம்புகிறேன். அதுவே எனது எதிர்பார்ப்பும் ஆகும். இருபத்தியோராம் நூற்றாண்டினை ஆசியாவின் நூற்றாண்டு என உலக சமூகத்தினர் அழைக்கின்றனர். இந்த ஜனவரி முதலாந் திகதி பிறக்கும் இருபத்தியோராம் நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தத்தினை இலங்கையின் தசாப்தமாக மாற்றியமைப்போம்.

வரலாற்றில் எப்போதாவது 21 ஆம் நூற்றாண்டின் இந்த மூன்றாவது தசாப்தத்தினை மீண்டும் திரும்பிப் பார்க்கும் போது, இலங்கை நாடு உலக சமூகத்தின் மத்தியில் பிரகாசித்த தசாப்தம் என இந்த தசாப்தத்தினை அழைக்க வேண்டும். பிறக்கும் 2020 புதுவருடம் மற்றும் ஆரம்பமாகும் புதிய தசாப்தம் ஆகியன அனைத்து இலங்கையருக்கும் எதிர்பார்ப்புகள் நிறைவேறுகின்ற, நாட்டைக் கட்டியெழுப்பும் யுகமாக அமைய வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *