கட்டுப்பாடுகளுடன் 20 வீத ஊழியர்களை தொழிலுக்கு அழைக்க தீர்மானம்

(UTV|கொழும்பு) – எதிர்வரும் 20 ஆம் திகதியின் பின்னர் காலவரையறையின்றி ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அரச ஊழியர்களில் 20 வீதமானோரை வேலைக்கு அழைக்கவும் அச்சுறுத்தல் இல்லாத மாவட்டங்களில் 50 வீத ஊழியர்களை தொழிலில் ஈடுபடுத்தவும் அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.

தனியார் துறையினர் ஆரோக்கியமான விதத்தில் நடவடிக்கை எடுக்கவும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி, உள்ளக வர்த்தகம், உணவுப்பாதுகாப்பு மற்றும் பாவனையாளர்கள் நலன்நோம்புகை அமைச்சின் கீழ் அதிக தேசிய வேலைத்திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி செயலணியின் வேலைத்திட்டங்கள் எவ்வாறானதாக அமைந்துள்ளது என வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் அமைச்சர் இது தொடர்பில் தெரிவிக்கையில்;

“.. கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை அடுத்து நாட்டின் தற்போதைய நிலைமையினை அவதானித்துப் பார்க்கையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இருந்த நிலைமையை விடவும் இப்போது ஆரோக்கியமான நிலைமையே உள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எனினும் சுகாதார வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அது ஒருபுறம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நாட்டின் தேசிய பொருளாதாரம் குறித்து கவனம் செலுத்தியாக வேண்டும். மக்களுக்கான உணவு உற்பத்தியை பெருக்க வேண்டும்.

ஆகவே அத்தியாவசிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. எனவே எதிர்வரும் 20 ஆம் திகதியின் பின்னர் காலவரையறையின்றி ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள மாவட்டங்களான கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்பாணம் ஆகிய மாவட்டங்களில் அரச ஊழியர்களில் 20 வீதமானவர்களை வேளைக்கு வரவழைத்து நிறுவனங்களை இயக்குவதெனவும் அதேபோல் கொரோனா தொற்றுப்பரவல் அச்சுறுத்தல் குறைந்த ஏனைய வெளி மாவட்டங்களில் தொழிற்ச்சாலைகள் , நிறுவனங்கள் மற்றும் ஏனைய தொழில்களுக்கு 50 வீதமானவர்களை தொழிலில் ஈடுபடுத்தவும் அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. அதேபோல் தனியார் துறையினரும் இவ்வாறான அரச ஆலோசனைகளை பின்பற்றி தமது ஊழியர்களை வேலைக்கு அமர்த்த நடவடிக்கை எடுக்க முடியும்.

குறிப்பாக நாட்டின் தொழில் பேட்டைகள் மூடப்பட்டுள்ள நிலையில் தேசிய ரீதியில் மிகப்பெரிய தாக்கத்தை இது ஏற்படுத்தும்.

குறிப்பாக ஆடை தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள காரணத்தினால் சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யுமாறு கோரிக்கை இருந்தும் எம்மால் இயங்க முடியாத நிலைமை உள்ளது.

இன்றுள்ள அச்சுறுத்தலான சூழலில், முகக்கவசங்கள், கையுறைகள், தற்காப்பு ஆடைகள் மற்றும் தலை கவசங்கள் என்பவற்றின் பற்றாக்குறை இருக்கின்ற காரணத்தினால் ஐரோப்பிய நாடுகள் எம்மிடம் இவற்றை தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆகவே உடனடியாக அவற்றை உற்பத்தி செய்தால் குறித்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஐக்கிய நாடுகள் சபை எமக்கு வாக்குறுதி வழங்கியுள்ளது.

அதேபோல் தேயிலை உற்பத்தி, நெல் உற்பத்தி, மரக்கறி விளைச்சல்கள், அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தி மற்றும் மருந்து உற்பத்திகளை உடனடியாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க உரிய தரப்பினருக்கு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அதற்கான சகல ஏற்பாடுகளும் செய்துகொடுக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது..” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *