(UTV|கொழும்பு) – முகக்கவசம் அணியாமல் பொது நிகழ்ச்சியில் பங்குபற்றிய பல்கேரியா நாட்டின் பிரதமருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக பல்வேறு நாடுகள் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், முகக்கவசம் அணியாமல் வீடுகளை விட்டு வெளியே வரும் நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், பல்கேரியாவின் பிரதமரான பொய்க்கோ போரிசோவ் நேற்று அந்நாட்டின் ரிலா மனொஸ்டோரி நகரில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு முகக்கவசம் அணியாமல் சென்று அங்கு பிரார்த்தனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.
மேலும், அவருடன் சென்ற அதிகாரிகள் பலரும், பத்திரிக்கையாளர்களும் முகக்கவசம் அணியாமல் விதிகளை மீறியுள்ளனர்.
இதையடுத்து, கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அமலில் உள்ள உத்தரவை மீறி முகக்கவசம் அணியாமல் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் பொய்க்கோ பொரிசோவ் உள்பட அதிகாரிகள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக பல்கேரிய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய முகக்கவசம் அணியாமல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் உட்பட அனைவருக்கும் தலா 300 லிவ்ஸ் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றன.
பல்கேரியா நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போது இடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ள நிலையில், முக்கவசம் அணியாத மக்களுக்கு அபராதம் விதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.