(UTV | அமெரிக்கா) – உலகில் மில்லியன் கணக்கான மக்களை பலி வாங்கிய கொடிய பிளேக் நோய், சீனாவை அடுத்து தற்போது அமெரிக்காவில் கண்டறியப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உலக நாடுகள் மொத்தமும் கடந்த ஆறு மாதங்களாக கொரோனா பெருந்தொற்றுடன் போராடி வருகின்ற இந்நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பொருளாதார நிலையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் கொரோனாவை கட்டுப்படுத்த போராடும் நிலையில், இன்னொரு ஆட்கொல்லி நோய் தலை தூக்கியுள்ளதாக பகீர் தகவல்கள் வெளியாகி வருகிறது.
சீனாவில் இந்த ஆட்கொல்லி பிளேக் நோய் கண்டறிந்ததாக வெளியான தகவலை அடுத்து தற்போது அமெரிக்காவிலும் உறுதியாகியுள்ளது.
கொலராடோவில் மோரிசன் நகரில் அணில் ஒன்றுக்கு பிளேக் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈக்கள் வாயிலாக மிருகங்களுக்கு பொதுவாக பரவும் இந்த கொடிய பிளேக் நோய் மனிதர்களில் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எச்சில், சளி மூலமாகவும் பரவக்கூடியது.
சரியாகச் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் இது உயிர்க்கொல்லி நோயாகிவிடும் என்ற எச்சரிக்கையும் உலக சுகாதார அமைப்பால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தற்போதைய சூழலில் வளர்ப்பு மிருகங்கள் ஆபத்தில் இருப்பதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பூனைகள் பெருமளவு பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், விசித்திரமான நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மிருக நல மருத்துவர்களை நாட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த கொடிய பிளேக் நோயால் யூரேசியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் இதுவரை 200 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.