LPL அணிகளை வாங்க அம்பானி, ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்கள் இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் நடாத்தப்படும் ‘லங்கா பிரீமியர் லீக்’ கிரிக்கெட் போட்டிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சர்வதேச வீரர்கள் 420 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் அதில 150 பேர் ஏலத்திற்கு தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏலத்தில் வாங்குவதற்கு பல பிரபலங்கள் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி ‘லங்கா பிரீமியர் லீக்’ கிரிக்கெட் அணிகளை விலைக்கு வாங்க முகேஷ் அம்பானி, ஷாருக்கான், ப்ரீத்தி சின்டா ஆகியோர் எதிர்வரும் 01ம் திகதி இலங்கை வரவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினை மேற்கோள்காட்டி செய்திக்க வெளியாகியுள்ளன.

‘லங்கா பிரீமியர் லீக்’ கிரிக்கெட் தொடருக்கு இணைய வழி ஊடாக ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி இடம்பெறவுள்ள வீரர்களுக்கான ஏலத்தில், விளையாடும் 5 அணிகளுக்கும், தலா ஒரு அணிக்கு 6 சர்வதேச வீரர்கள் வீதம் 30 வீரர்கள் உள்வாங்கப்படவுள்ளனர்.

இருபதுக்கு-20 ஆட்ட மைதானங்களில் நட்சத்திர வீரர்களாக திகழும் வீரர்கள் பலர் இந்த லீக் தொடரில் விளையாட ஆர்வமாக உள்ள நிலையில், க்றிஸ் கெய்ல், டேரன் சமி, டேரன் பிராவோ, ஷஹிட் அப்ரிடி, ஷகீப் அல் ஹஸன், ரவி பொபாரா, ஜொனீ பெயார்ஸ்டோ, கொலின் முன்ரோ, லுக் ரைட் மற்றும் வர்னன் ப்ளெண்டர் இவர்களுள் விசேடமானவர்கள்.

அயல் நாடான இந்தியாவினை பிரதிநிதித்துவப்படுத்தி நான்கு பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் முனாப் படேல், பிரவீன் குமார், மன்ப்ரிட் கோணி மற்றும் சதாப் ஜகானி ஆகிய வீரர்கள் அடங்குகின்றனர்.

லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு – 20 போட்டித் தொடரானது எதிர்வரும் நவம்பர் மாதம் 14ம் திகதி முதல் டிசம்பர் 06ம் திகதி வரை ரங்கிரி தம்புள்ளை, பல்லேகல மற்றும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ போன்ற சர்வதேச மைதானங்களில் இடம்பெறவுள்ளது. போட்டியின் ஆரம்ப உத்தியோகபூர்வ நிகழ்வுகள் ஹம்பாந்தோட்டையில் நடாத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

  • ஆர்.ரிஷ்மா 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *