உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் மைதானம் மாற்றம்

(UTV |  இந்தியா) – முதல் முறையாக நடத்தப்படும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்திற்கு பதிலாக வேறொரு மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

ஐசிசியின் டெஸ்ட் தகுதி பெற்ற 9 அணிகளில் எது சிறந்தது என்பதை வெளிக்கொண்டு வரும் விதமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்தலாம் என 2010ம் ஆண்டில் முடிவெடுக்கப்பட்டது. இதன் பின்னர் 2013 மற்றும் 2017 என இரண்டு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்தும் முயற்சிகள் கைகூடாமல் போனதையடுத்து 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் திகதி இந்த தொடர் தொடங்கியது. இடையில் கொரோனா பரவல் காரணமாக ஒராண்டு தடைபட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் போட்டிகள் நடைபெற்று இதன் இறுதிக் கட்டட்தை எட்டியுள்ளது.

9 அணிகளும் ஒன்றுடன் ஒன்று என 6 அணிகளுடன் மோதியதன் அடிப்படையில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்த நிலையில் தற்போது சவுத்தாம்பனுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

ஜூன் 18 முதல் 22ம் திகதி வரை சவுத்தாம்டனின் Ageas Bowl மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லார்ட்ஸ் மைதானத்தைக் காட்டிலும் சவுத்தாம்டனில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடிக்கத் தேவையான வசதிகள் இருப்பதால் அங்கு நடத்தலாம் என முடிவாகி இருப்பதாக சவுரவ் கங்குலி மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *