விமலுக்கு எதிரான விசாரணையினை விரைவுபடுத்துமாறு ரிஷாத் கோரிக்கை [VIDEO]

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரானையும் தன்னையும் தொடர்புபடுத்தி, அமைச்சர் விமல் வீரவன்ச வேண்டுமென்றே தெரிவித்த பொய்யான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், விசாரணைகளை விரைவுபடுத்துமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் இன்று(14) கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக கடந்த 10ம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடொன்றை செய்த அவர், இது தொடர்பில் அவரை விசாரணை செய்து, உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு சி.ஐ.டி யினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

“ரிஷாட் பதியுதீனின் சகோதரர், ஈஸ்டர் தற்கொலை குண்டுதாரி சஹ்ரானுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளார். அந்த அழைப்பின் பின்னர், அவர் தனது சகோதரரான ரிஷாட் பதியுதீனுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். அதன் பின்னர் மீண்டும் அவர் சஹ்ரானுக்கு அழைப்பை மேற்கொண்டுள்ளார். இந்த விடயத்தை பொலிசார் எம்மிடம் தெரிவிக்கவில்லை. மதிப்பிற்குரிய கர்தினால் அவர்களிடமே தெரியப்படுத்தியுள்ளனர். அவரது சகோதரர் கைதான போது, அவர் இதனை வியாபார ரீதியிலான தொலைபேசி அழைப்பு என்று கூறியுள்ளார்.”

அமைச்சர் விமல் வீரவன்ச கடந்த 09ம் திகதி இடம்பெற்ற “இஸ்லாமிய அடிப்படைவாதம்: உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழுக்கு அப்பால்” – பொது பிரச்சாரம்’ என்ற நிகழ்விலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

விமலுக்கு எதிராக சி.ஐ.டி யினரிடம் முறைப்பாடொன்றை கையளித்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கூறியதாவது,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்றதிலிருந்து, விமல் வீரவன்ச என்னைப் பற்றி மிகவும் மோசமான, பொய்யான குற்றச்சாட்டுக்களை கட்டவிழ்த்து வருகின்றார். பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலும், சி.ஐ.டி யினரின் விசாரணைகளிலும் என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்துமே பொய்யென நிரூபிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், அண்மையில் வெளிவந்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையிலும், எனக்கும் இந்த தாக்குதல் சம்பவத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் என்னைப் பற்றி விமல் வீரவன்ச பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்தார். அத்துடன், என்மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத பட்சத்தில், தான் அரசியலில் இருந்து வெளியேறுவதாகவும் சூளுரைத்தார். எனவே, அவர் இந்தச் சந்தர்ப்பத்தில், அரசியலில் இருந்து வெளியேறி, தான் கூறியதை செயலில் காட்ட வேண்டும். தவிர நேற்று மாலை மீண்டும் ஒரு பெரிய பொய்யை கூறியுள்ளார். எனவேதான் இன்று அதற்கெதிராக முறைப்பாடு செய்துள்ளேன். அதுமாத்திரமின்றி, எனது சட்டத்தரணி ஊடாக விமலுக்கு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தயாராகி வருகின்றேன்.

விமலின் பேச்சுக்கள் அப்பட்டமான பொய்யாகும். இதுவரை காலமும் கூறியது போன்றே இப்போதும் கூறியுள்ளார். சஹ்ரானை எந்தக் காலத்திலும் நான் சந்திக்கவில்லை. அதேபோன்று, எனது சகோதரரும் சந்திக்கவுமில்லை, பேசவுமில்லை. அவருக்கும் எங்களுக்கும் இடையிலே எந்தத் தொடர்பும் கிடையாது. இதைத்தான் நான் அன்றும் சொன்னேன், இன்றும் சொல்கின்றேன். இவ்வாறான அபாண்டங்களை கூறி வரும் விமல் பற்றி எல்லோருக்கும் தெரியும். அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விமர்சிப்பதற்கு எனக்கு விருப்பமில்லை. ஆனால், அவருக்கு இரண்டு பிறந்த தினம், இரண்டு அடையாள அட்டைகள், இரண்டு கடவுச்சீட்டுக்கள். இலங்கையில் இவ்வாறு எவருக்குமே இல்லை. அவ்வாறானவர்தான் இந்த விமல்.

நாட்டு மக்களிடம் ஒன்றைக் கூற விரும்புகின்றேன். விமல் வீரவன்ச, தனது அரசியல் இருப்புக்காகவே இவ்வாறு செய்கின்றார். என் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்குமாறு விமலிடம் சவால் விடுகின்றேன். அத்துடன், எனது முறைப்பாட்டை சி.ஐ.டி விசாரணை செய்ய வேண்டுமெனவும் நான் எதிர்பார்க்கின்றேன்.” என்றார்.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், சந்தேக நபர் ஒருவரை விடுவிக்குமாறு இராணுவத்தளபதிக்கு அழுத்தம் கொடுத்ததாக, உங்கள் மீது குற்றச்சாட்டொன்று இருக்கின்றதே” என்ற ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ரிஷாட் பதியுதீன் எம்.பி,

“நான் அவருக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. எனது மாவட்டத்தைச் சேர்ந்த மொய்னுதீன் என்பவரின் மகன் ஒருவரை முகமூடி அணிந்தவர்கள், அவரது வீட்டுக்கு வந்து கொண்டு சென்றதாகவும், அவர் எங்கு இருக்கின்றார் என்பது தொடர்பில் அறிந்து கூறுமாறு அவரது குடும்பத்தார் என்னிடம் வேண்டினர். நான் இது தொடர்பாக பொலிஸ் உயரதிகாரிகள் பலருடன் தொடர்புகொண்டு தகவல்களை பெறமுடியாது போகவே, முன்னாள் இராணுவத் தளபதியிடம் தொலைபேசியில் விசாரித்தேன். அதுவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விக்கிரமசிங்க, தங்களிடம் அவ்வாறான ஒரு நபர் இல்லையெனவும், இராணுவத்திடம் கேட்டுப் பாருங்கள் என்றார். அதன் பின்னர் தான், இராணுவத் தளபதிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, இவ்வாறானவர் இருக்கின்றாரா? எனக் கேட்ட போது, இராணுவத் தளபதி, “இப்போது கூறமுடியாது. மீண்டும் அழையுங்கள்” என்றார். இராண்டாவது முறை நான் அவரிடம் கேட்ட போது, “அவ்வாறான ஒருவர் இருக்கின்றார்” எனக் கூறினார். அதை விடுத்து, நான் எந்த சந்தர்ப்பத்திலும், எவரிடமும் அந்த நபர் தொடர்பில் எந்தவொரு அழுத்தமும் வழங்கவில்லை” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *