இறக்குமதியாகும் பொருட்களின் விலைகள் உலக சந்தையின் சக்திகளாலேயே தீர்மானம்

(UTV | கொழும்பு) – மனித உரிமைகள் தொடர்பில் கருத்துரைப்பவர்கள் நெல் கொள்வனவு அதிகரிப்பினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகள் குறித்து கருத்துரைப்பதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“.. வாழ்க்கை செலவினங்ளை கட்டுப்படுத்துவதற்கு உற்பத்தி மற்றும் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களின் விலைகள் உலக சந்தையின் சக்திகளால் தீர்மானிக்கப்படுகின்றன.

வரிகளை குறைப்பதன் ஊடாக அவற்றின் விலைகளை கட்டுப்படுத்த முடியும். நாட்டில் பயிரிடக்கூடிய 17 பயிர்கள் அடையாளம் காணப்பட்டமையை அடுத்து இறக்குமதி தடைகள் விதிக்கப்பட்டன.

இதனூடாக குறித்த பயிர்கள் உள்நாட்டிலேயே பயிரிடப்பட்டுள்ளன. ஒரு கிலோகிராம் நெல்லுக்கான கொடுப்பனவு 32 ரூபாயிலிருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நெல்லுக்கான கொடுப்பனவின் நன்மைகள் ஒரு பகுதியிலுள்ள மக்களுக்கு மாத்திரமின்றி முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களுக்கும் கிடைத்துள்ளன.

மனித உரிமைகள் குறித்து பேசுபவர்கள் இதனூடாக மக்களுக்கு கிடைத்த நன்மைகள் தொடர்பில் கருத்துரைப்பதில்லை. மக்களின் பிரச்சினைகளை பார்த்து அரசாங்கம் அமைதியாக செயற்படாது. அத்துடன் காடழிப்பு செயற்பாடுகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் ஆதரவளிக்காது..” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்ததாக அவரது ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *