இந்திய லெஜண்ட்ஸின் அதிரடிக்கு சவாலாக இலங்கை லெஜண்ட்ஸ்

(UTV | இந்தியா) – 2021 ஆம் ஆண்டுக்கான வீதி பாதுகாப்பு டி-20 சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியானது இன்றைய தினம் இலங்கை லெஜண்ட்ஸ் மற்றும் இந்திய லெஜண்ட்ஸ் ஆணிகளுக்கிடையே இன்று நடைபெறவுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள், பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் களம் காணும் வீதி பாதுகாப்பு உலக இருபதுக்கு20 சம்பியன்ஷிப் போட்டியானது இந்தியாவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

இந்நிலையிலேயே இன்றிரவு மும்பையில் இன்றிரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகும் இறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் களம் காணுகின்றனர்.

சம பலம் கொண்ட இரு அணிகளும் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதவுள்ளமையினால் இப்போட்டியானது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அது மாத்திரமன்றி கடந்த 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் நினைவினையும் நம் மனதில் சற்று எட்டிப் பார்க்க வைக்கிறது இந்த ஆட்டம்.

அதிரடி ஆட்டக்காரர்களை கொண்டுள்ள இந்திய அணியானது நடப்பு தொடரில் இரு தடவைகள் 200 க்கும் மேற்பட்ட ஓட்டங்களை குவித்துள்ளது.

குறிப்பாக சேவாக், சச்சின், யுவராஜ் சிங் மற்றும் யூசுப் பத்தான் போன்றவர்கள் போட்டியின் எந்த தருணத்திலும், அதிரடி மூலம் எதிரணிக்கு மரண பயம் ஏற்படுத்தக் கூடியவர்களாக உள்ளனர். அதேபோல் பந்து வீச்சிலும் மன்பிரீத் கோனி, மொஹமட் கைஃப், சகிர் கான், முனாஃப் படேல், இர்பான் பதான் மற்றும் பிரக்யன் ஓஜா போன்ற பந்து வரிசையினை கொண்டுள்ளது.

இந்திய அணியின் நிலை அவ்வாறிருக்க இலங்கை அணியானது துடுப்பாட்டத்தை விட பந்து வீச்சில் எதிரணியை திக்குமுக்காட செய்யும் வியூகத்தில் அவர்கள் கை தேர்ந்தவர்களாக உள்ளனர்.

குறிப்பாக அணித் தலைவர் டில்சான் தனது சூழல் மூலம் எதிரணி வீரர்களை கதிகலங்க வைத்து வருகிறார். டில்சானுக்கு உறு துணையாக சூழல் பந்து வீச்சில் ரங்கன ஹேரத் சனத் ஜெயசூரிய போன்ற பந்து வீச்சாளர்களும் தமது பங்களிப்பினை திறம்பட வழங்கி வருகின்றனர்.

வேகப் பந்து வீச்சினை பொருத்தமட்டில் நுவான் குலசேகர, தம்மிக பிரசாத், ஃபர்வீஸ் மஹாரூப் போன்றவர்களும் சவால் விடக்கூடியவர்கள். பந்து வீச்சில் மாத்திரமன்றி துடுப்பாட்டத்திலும் இலங்கை அணி நல்ல நிலையில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *