ஐபிஎல் தொடரை வைத்து இந்தியாவை வளைக்கும் லண்டன்

(UTV |  லண்டன்) – ஐபிஎல் போட்டியை இலண்டனில் நடத்த வேண்டும் என இலண்டன் மேயர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

கொரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளது. கொரோனா தொற்று அச்சம் காரணமாக, தொடக்க நிலை ஆட்டங்களில் ரசிகா்களுக்கு அனுமதி கிடையாது.

ஐபிஎல் 2021 போட்டி நேற்று முதல் சென்னையில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தியது பெங்களூர் அணி. இன்று மும்பையில் சென்னையும் தில்லியும் மோதுகின்றன.

இந்நிலையில் ஐபிஎல் போட்டியை இலண்டனில் நடத்த வேண்டும் என இலண்டன் மேயர் சாதிக் கான் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் ஒரு பேட்டியில் கூறியதாவது:

“.. ஐபிஎல் போட்டியை லண்டனில் நடத்த ஆர்வமாக உள்ளேன். இதன் மூலம் உலகின் விளையாட்டுத் தலைநகரமாக இலண்டன் விளங்கும். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மட்டுமல்ல ஐபிஎல் போட்டியில் விளையாடும் கோலியையும் இலண்டனில் காண விரும்புகிறேன். பெங்களூர் அணி தலைவர் கோலியையும் சென்னை தலைவராக தோனியையும் மும்பை தலைவராக ரோஹித் சர்மாவையும் இங்கு காண ஆர்வமாக உள்ளேன்.

ஐபிஎல் நிர்வாகத்திடமும் ஐபிஎல் அணிகளிடமும் இது குறித்துப் பேசி வருகிறோம். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் மற்றவர்களிடமும் பேசி இந்தக் கனவை நிறைவேற்ற விரும்புகிறேன். இதனால் இலண்டனுக்கு மட்டுமல்ல இங்கிலாந்தின் இதர கிரிக்கெட் மைதானங்களுக்கும் பயனுள்ளதாக அமையும். ஐபிஎல் போட்டியை இலண்டனில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள். இந்தியாவுக்கு இலண்டனையும் இலண்டனுக்கு இந்தியாவையும் மிகவும் பிடிக்கும். இதனால் இரு தரப்புக்கும் பலன் கிடைக்கும்..” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *