எந்தவொரு சவாலையும், தேர்தலையும் வெற்றி கொள்ளும் ஆற்றல் ஐக்கியதேசியக் கட்சிக்கு உண்டு – பிரதமர்

(UDHAYAM, COLOMBO) – எந்தவொரு சவாலையும், தேர்தலையும் வெற்றி கொள்ளும் ஆற்றல் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

முன்னைய வருடத்தை விட இம்முறை கூடுதலான மக்கள் ஜக்கியதேசியக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் இந்த மக்கள் வெள்ளத்தை அவதானிக்கும்போது எந்தவொரு தேர்தலையும் சவாலையும் வெற்றி கொள்ளக்கூடிய ஆற்றல் ஐக்கிய தேசியக் கட்சிக்கு உண்டு என்று பிரதமர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பொரளை கம்பெல் பூங்காவில் நேற்று நடைபெற்றது.

ஜப்பான், இந்தியா, ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் கைத்தொழிலை அபிவிருத்தி செய்து நாட்டை கடன் பழுவிலிருந்து மீட்கப் போவதாக சுட்டிக்காட்டிய பிரதமர் பொருளாதாரத்தை சீர்குலையவிடாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

முன்னைய ராஜபக்ஷ ஆட்சியாளர்கள் ஏற்படுத்திய கடன் நெருக்கடியில் இருந்து நாடு மீண்டுவருகிறது. நாட்டில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கு சகலரது ஒத்துழைப்பும் அவசியமென பிரதமர் கூறினார்.

2015ம் ஆண்டு பல கட்சிகள் ஒன்றுகூடி ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக பாடுபட்டன. அந்தக் கட்சிகளின் அபிலாஷைகள் இன்று நிறைவேறி வருகின்றன. அடுத்த சில ஆண்டுகளில் ஏற்றுமதி வருமானம் இரு மடங்காக அதிகரிக்கும். மொத்தமாக ஆறாயிரத்து 600 பண்டங்களுக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை கிடைக்கவுள்ளது என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *