வீழ்ந்தது கொல்கத்தா

(UTV | இந்தியா) – ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிரித்வி ஷாவின் அதிரடியுடன் டெல்லி அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

14 ஆவது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் தொடரின் 25 ஆவது லீக் ஆட்டம் நேற்றிரவு அஹமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ரிஷாப் பந்த் தலைமையிலான டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் ஈயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையில் ஆரம்பானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி களத்தடுப்பை தேர்வுசெய்ய, கொல்கத்தா முதலில் துடுப்பெடுத்தாட ஆடும் களம் நுழைந்தது.

ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய நிதிஷ் ரானா 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற, அவரையடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி சுப்மன் கில்லுடன் சற்று நேரம் தாக்குப் பிடித்தாடினார்.

அதனால் ஒன்பது ஓவர்கள் நிறைவில் கொல்கத்தா அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 65 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

எனினும் 9.3 ஆவது ஓவரில் ராகுல் திரிபாதி 19 ஓட்டங்களுடன் மார்கஸ் ஸ்டொய்னஸின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, கொல்கத்தா அணியின் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிய ஆரம்பித்தன.

அதன்படி திரிபாதியின் வெளியேற்றத்தையடுத்து ஆடுகளம் நுழைந்த அணித் தலைவர் ஈயன் மோர்கன் மற்றும் சுனில் நரேன் டக்கவுட்டுடனும், சுப்மன் கில் 43 ஓட்டங்களுடனும், தினேஷ் கார்த்திக் 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இதனால் கொல்கத்தா அணி 16.2 ஓவர்களுக்கு 109 ஓட்டங்களுக்கு ஆறு விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இறுதியாக பேட் கம்மின்ஸுடன் இணைந்து ரஸ்ஸல் அதிரடிகாட்ட, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் கொல்கத்தா அணி 154 ஓட்டங்களை பெற்றது.

ரஸ்ஸல் 24 பந்துகளில் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடங்கலாக 45 ஓட்டங்களுடனும், பேட் கம்மின்ஸ் 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

155 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி, முதல் ஓவரையே அமர்க்களப்படுத்தியது.

முதலாவது ஓவருக்காக கொல்கத்தா அணி சார்பில் சிவாம் மாவி பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள, அந்த ஓவரை எதிர்கொண்ட பிரித்வி ஷா 6 பவுண்டரிகளை விளாசித் தள்ளினார். அது மாத்திரமன்றி அந்த ஓவருக்கு ஒரு உதிரிப் பந்தும் பெறப்பட்டது.

இந்த அதிர்ச்சியில் இருந்து கொல்கத்தா பந்து வீச்சாளர்கள் மீற்வதற்கு சற்றும் இடம்கொடுக்காத பிரித்வி ஷா 18 பந்துகளிலேயே அரைசதம் கடந்தார்.

பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 67 ஓட்டங்களை விளாசியது டெல்லி அணி. நடப்பு தொடரில் பவர்-பிளேயில் ஒரு அணி எடுத்த அதிகபட்சம் ஓட்டம் இது தான்.

இவர்கள் தொடக்க விக்கெட்டுக்காக 13.5 ஓவர்களில் 132 ஓட்டங்களை குவித்து வெற்றிக்கு அடித்தளம் இட்டனர்.

13.5 ஆவது ஓவரில் தவான் 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, 15.2 ஆவது ஓவரில் பிரித்வி ஷா மொத்தமாக 41 பந்துகளில் 11 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் அடங்கலாக 82 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தவானின் வெளியேற்றத்தையடுத்து களமிறங்கிய ரிஷாப் பந்தும் 16 ஓட்டங்களில் ஆட்டமிழக்க இறுதியாக டெல்லி அணி 16.3 ஓவர்கள் நிறைவுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இது டெல்லி அணியின் ஐந்தாவது வெற்றி என்பதுடன், கொல்கத்தாவின் ஐந்தாவது தோல்வியும் ஆகும்.

போட்டியின் ஆட்டநாயகனாக பிரித்வி ஷா தெரிவானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *