ரிஷாதினால் 500 கோடி ரூபா நட்டஈடு கோரி உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல்

(UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், தன்னை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து சி.ஐ.டி.யினர் தடுத்து வைத்துள்ளதை ஆட்சேபித்து 500 கோடி ரூபா நட்டஈடு பெற்றுத் தரக் கோரி உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மனுதாரரான தான், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எனும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சியின் தலைவர் எனவும், 2000 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வருவதாகவும், பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நிலையில் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் எந்த அடிப்படைகளும் இன்றி, 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரரான ரிஷாத், தனது சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஊடாக இம்மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடாத்திய மொஹம்மட் இப்ராஹீம் இன்சாப் அஹமட்டுக்கு சொந்தமான குளோசஸ் எனும் செப்பு தொழிற்சாலையுடன் தொடர்புபட்ட விவகாரத்தில் தன் மீது விரல் நீட்டப்பட்டாலும், குறித்த நிறுவனத்துடன் தொடர்புடைய கொடுக்கல் வாங்கல்களுடன் தனக்கு எவ்வித தொடர்புகளும் இல்லை என ஆவணங்கலையும் இணைத்து ரிஷாத் பதியுதீன் இந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான பின்னணியில், கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி தான் கைதுச் செய்யப்பட்டதும், 27 ஆம் திகதி 90 நாள் தடுப்புக் காவவலில் வைக்க பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி வழங்கிய அனுமதியும் சட்டத்துக்கு முரணானது எனவும் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த மனுவை விசாரணைக்கு ஏற்குமாறும், சி.ஐ.டி.யில் தன் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்புக்காவல் உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதிக்குமாறும் மனுதாரர் கோரியுள்ளார். அத்துடன் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் 500 கோடி ரூபா நட்ட ஈட்டினை பிரதிவாதிகளிடம் இருந்து பெறுமாரும் ரிஷாத், தனது சட்டத்தரணி ஊடாக உயர் நீதிமன்றை கோரியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *