(UTV | கொழும்பு) – சமுத்திர சூழலின் முக்கியத்துவம் குறித்து உலக சமூகத்தை விழிப்பூட்டும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட உலக சமுத்திர தினத்தை முன்னிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொள்கிறேன்.
அபிவிருத்தி மற்றும் தொழில் மயமாக்கல் போன்ற மனித நடவடிக்கைகளின் தாக்கத்தால் தற்போது கடல் மாசுபாடு அதிகரித்துள்ளது என்பது சூழலியல் நிபுணர்களின் கருத்தாகும்.
இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள இலங்கை சமுத்திர சூழலைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
இந்த நோக்கத்திற்காக, 2008 ஆம் ஆண்டில் சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவி கடல்சார் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடிந்தது.
நாம் வாழும் பூமியின் 70 சதவிகிதம் கடலால் சூழப்பட்டுள்ளது. உயிரினங்கள் உயிர் வாழ்விற்கு நேரடியாக பங்களிக்கும் சமுத்திர சூழல் பல்வேறு மனித நடவடிக்கைகளால் மாசுபடுத்தப்படுவது துரதிர்ஷ்டவசமானது.
கடலில் மாசு சேர்ந்தவுடன் அதை சரி செய்ய முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் வரையறுக்கப்படுவதால், அந்த தாக்கம் மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களுக்கும் முழுமையான சமுத்திர சூழல் கட்டமைப்புக்கும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், காலநிலை மாற்றத்தின் விளைவுகள் வரை அது நீட்டிக்கப்படும்.
கப்பல்கள் மூழ்குதல் மற்றும் அவை விபத்திற்குள்ளாதல் என்பன சமுத்திர மாசுபாட்டிற்கு நேரடி தாக்கம் செலுத்துவதுடன், அண்மையில் கொழும்பை அண்மித்த கடற்பரப்பில் விபத்திற்குள்ளான கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பை இழப்பீட்டின் மூலம் மதிப்பிட முடியாது என்பது எனது நம்பிக்கையாகும்.
அதனால் நமது கடற்கரைகள், கடல்வாழ் உயிரினங்கள், கடல் பல்லுயிர் பெருக்கம் மற்றும் மீன்பிடி சமூகத்தின் மீதான தாக்கம் என்பவற்றை அளவிட முடியாது.
அத்துடன் ஆறுகள் அல்லது கால்வாய்கள் மூலம் நேரடியாக நகர்ப்புற திடக்கழிவுகள் கடலுக்கு அனுப்பப்படுவதாக அண்மையில் சுற்றுச்சூழல் நிபுணர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. அதன்படி, இது கடற்கரை மாசுபாட்டிற்கு முக்கிய தாக்கம் செலுத்துகிறது.
பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் கடலில் சேர்க்கப்பட்டால், அதன் விளைவு பிறக்காத தலைமுறை வரை தாக்கம் செலுத்தும். இது குறித்து கவனம் செலுத்திய அரசாங்கம் இந்த ஆண்டு திடக்கழிவு முகாமைத்துவம் மேற்கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
கடலோர சதுப்பு நிலங்களின் மறுசீரமைப்பு, பவளப்பாறை மாற்று திட்டங்களை குறிப்பிடத்தக்க மட்டத்திற்கு முன்னேற்றுவதற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரதேசங்கள் குறித்த கண்காணிப்பை மிகவும் செயற்திறன் மிக்கதாக்குவதற்கும் இந்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நான் ஆலோசனை வழங்கியுள்ளேன்.
சமுத்திர பல்கலைக்கழகத்தை நிறுவியதன் மூலம் இந்த விடயத்தில் காணப்படும் ஆர்வம் மற்றும் கடல் சார்ந்த ஆய்வு ஆகியவற்றை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு நான் அப்போது முன்னெடுத்த நடவடிக்கைகள் இன்றைய காலத்தை விட எதிர்காலத்திற்கு உகந்ததாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை.
மீன்பிடி சமூகத்தினர் உள்ளிட்ட சமுத்திர சூழலை வாழ்வாதாரமாக கொண்ட இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதற்காக நேரடியாக தாக்கம் செலுத்தும் சமுத்திர சூழலைப் பாதுகாக்க அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.
´வாழ்க்கையும் வாழ்வாதாரமும் சமுத்திரமே´ எனும் இம்முறை உலக சமுத்திர தின தொனிப்பொருளின் மூலமும் சமுத்திரமும் அது சார்ந்த அனைத்து மதிப்புகளையும் நினைவு கூருகின்றேன்.
இந்து சமுத்திரத்தின் முத்து என போற்றப்படும் எமது தாய்நாட்டின் இருப்பு மற்றும் அழகிற்காக சமுத்திர சூழல் அமைப்பை பாதுகாக்க ஒன்றிணைவோம் என நான் உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.