அஹ்னாபின் கைதும் தடுப்புக் காவலும் சட்ட விரோதமானது

(UTV | கொழும்பு) –  “நவரசம்” என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞரை, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் நீண்டகாலம் தடுத்து வைக்க, ஜனாதிபதி கையெழுத்திட்ட தடுப்புக் காவல் உத்தரவானது சட்ட விரோதமானது என உயர் நீதிமன்றுக்கு நேற்று அறிவிக்கப்பட்டது.

அஹ்னாபின் கைதும் தடுப்புக் காவலும் சட்ட விரோதமானது எனக் கூறி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று முதன் முறையக பரிசீலனைக்கு வந்த போது, மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் இதனை தெரிவித்தார்.

அஹ்னாப் ஜஸீம் கைது செய்யப்பட்ட போது, அரசியல் அமைப்பின் 19 ஆவது திருத்தம் அமுலில் இருந்தது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி கணக ஈஸ்வரன், அதன் பிரகாரம் ஜனாதிபதி எந்த அமைச்சுப் பதவியையும் வகிக்க முடியாது எனவும், அப்படி இருக்கையில் அஹ்னாபை தடுத்து வைக்க தடுப்புக் காவல் உத்தரவில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளமை சட்ட விரோதமானது என அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியலமைப்பின் 17 ஆவது உறுப்புரையுடன் இணைத்து வாசிக்கப்படும் அரசியலமைப்பின் 126 அவது உறுப்புரைக்கு அமைய, வெள்ளவத்தையைச் சேர்ந்த சட்டத்தரணி செல்லையா தேவபாலன், அஹ்னாப் சார்பில் தாக்கல் செய்துள்ள இந்த அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, காமினி அமரசேகர மற்றும் ஷிரான் குனரட்ன அகையோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு வந்தது.

எஸ்.சி.எப்.ஆர். 114/ 2021 எனும் இலக்கத்தின் கீழ் உயர் நீதிமன்றில் பதிவு செய்யப்பட்டுள்ள இம்மனு தொடர்பில் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி கனக ஈஸ்வரனினின் கீழ், ஜனாதிபதி சட்டத்தரணி இல்லியாஸ், சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜயசேகர உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்.

இந்த மனுவில் பாதுகாப்பு செயலர் கமல் குணரத்ன, பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன டி அல்விஸ், குறித்த பிரிவின் வவுனியா கிளை பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கே.கே.ஜே. அனுரசாந்த, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்த மனுவானது பரிசீலனைக்கு வந்த போது, மனு தொடர்பில் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்பட்டுள்ள போதும், அவசர மனுவாக கருதி விசாரணை செய்வதற்கு எடுத்துக்கொள்வது தொடர்பில் அவர்களுக்கு உரிய அறிவித்தல் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போதே, மன்றில் ஆஜராகையிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி கணக ஈஸ்வரன், தடுப்புக் காவலில் உள்ள அஹ்னாப் ஜஸீம், நீண்டகாலமாக எந்த குற்றச்சாட்டும் இன்றி அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தமது மகனின் வயதையே கொண்ட அவரது நிலைமை தொடர்பிலான இந்த மனுவை குறுகிய நாட்களுக்குள் பரிசீலிக்க வேண்டும் எனவும், அதர்காக எந்த நாளில் என்றாலும் மன்றில் ஆஜராக தான் தயார் எனவும் குறிப்பிட்டார்.

இதன்போதே ஜனாதிபதி கையெழுத்திட்ட தடுப்புக் காவல் உத்தர்வும் சட்ட விரோதமானது என்பதை அவர் சுட்டிக்கடடினார்.

இந்நிலையில் மன்றில் இருந்த சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அரச சட்டவாதி ரஜித்த பெரேராவிடம், வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் கையளிக்கப்பட்ட நிலையில், அடுத்த தவணையின் போது சட்ட மா அதிபர் சார்பில் பிரதிநிதித்துவம் அவசியம் என்பதும், அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாரும் பிரதம நீதியர்சர் அறிவுறுத்தினார்.

இந்நிலையிலேயே குறித்த மனு அவசர மனுவாக கருதி, எதிர்வரும் 6 ஆம் திகதி செவ்வாயன்று மீள பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

முன்னாதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவில் 26 வயதான கவிஞர் அஹ்னாப், கவிஞராகவும் ஆசிரியராகவும் செயற்படுவதாகவும் அவர், பேருவலை ஜாமியா நளீமியா கலாபீடத்தில் தனது கல்வியை நிறைவு செய்துள்ளதாகவும் மனுதாரர் சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2020 மே 16 அம் திகதி இரவு 8 மணியளவில், சிலாவத்துறை , பண்டாரவெளியில் அமைந்துள்ள வீட்டில் வைத்து 4 ஆம் பிரதிவாதியான வவுனியா ரி.ஐ.டி. கிளை பொறுப்பதிகாரியினால் கைது செய்யப்பட்டதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதன்போது அவரது வீட்டிலிருந்து 50 இற்கும் அதிகமான நவரசம் கவிதை தொகுப்பு புத்தகங்க்ளும் மேலும் சில புத்தகங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக மனுதாரர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதலில் கோட்டை நீதிமன்றில் உள்ள பீ 13101/19 வழக்கு தொடர்பில் அஹ்னாப் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும், கடந்த மார்ச் 3 ஆம் திகதி பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் கோட்டை நீதிமன்றின் குறித்த வழக்கில் அஹ்னாப் சந்தேகநபரில்லை என நீதிமன்றில் அறிவித்திருந்தார்.

எனினும் அவருக்கு எதிராக புதுக் கடை நீதிவான் நீதிமன்றில் உள்ள வழக்கொன்று தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்வதாக பிரசாந்த ரத்னாயக்க எனும் ரி.ஐ.டி.யின் உப பொலிஸ் பரிசோதகர் ஊடாக அறிவிக்கப்பட்டிருந்தது. என மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நிலையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கவிஞர் அஹ்னாப், தடுப்புக் காவலில் பெரும்பாலான நேரங்களில் கை விலங்கிட்டே வைக்கப்பட்டுள்ளதாகவும், நித்திரைக்கு செல்லும் நேரம் கூட அவ்வாறன நிலையிலேயே அவர் வைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் கைது செய்யப்படும் போது கூறப்பட்ட காரணத்தை விட, தற்போது, பேருவளை ஜாமியா நளீமியா கலாபீடிடத்தில் அடிப்படைவாதம் போதனை செய்யப்பட்டதாக ஒப்புதல் வாக்கு மூலம் ஒன்றினை வழங்குமாறு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் அஹ்னாப்பை சித்திரவதை செய்வதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தடுப்புக் காவலில் உள்ள அஹ்னாபை அங்கு எலி கடித்துள்ளதாகவும் அவருக்கு முறையான சிகிச்சைகள் கூட அளிக்கப்படவில்லை என அம்மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு நீதிவான் நீதிமன்றில் உள்ள பீ 44230/8/20 எனும் வழக்கில் தனக்கு எதிராகவே ஒப்புதல் வாக்கு மூலம் வழங்க அஹ்னாப் கட்டாயப்படுத்தப்படுவதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் , அஹ்னாபின் தந்தையிடம், ஜாமியா நளிமீயா கலாபீடத்தில் அடிப்படைவாதம் போதிக்கப்பட்டதாக வாக்கு மூலம் வழங்க அஹ்னாபை சம்மதிக்க வைக்குமாறு பேசியதாகவும், அவ்வாறு வாக்கு மூலம் அளித்தால் சிறிது நாட்களில் அவரை விடுவிக்க முடியும் என கூறியதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அஹ்னாபை அவரது சட்டத்தரணிகள் பார்வை இட முதலில் அனுமதிக்கப்படாத நிலையில், பின்னர் வழங்கப்பட்ட அனுமதியின் போது சட்டத்தரணியுடன் அவர் உரையாடுவதை ரி.ஐ.டி. அதிகாரிகள் ஒலிப்பதிவு செய்ததாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள அஹ்னாபின், அரசியல் அமைப்பு ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ள சிந்தனை செய்யும், மனச் சாட்சியை பின்பற்றும் மதச் சுதந்திரம் ( 10 ஆம் உறுப்புரை), சித்திரவதைக்கு உள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம் (11 ஆம் உறுப்புரை), சமத்துவத்துக்கான உரிமை (12 ஆம் உறுப்புரை), எதேச்சதிகாரமாக கைது செய்யப்படாமலும், தடுத்து வைக்கப்படாமலும் தண்டிக்கப்படாமலும் இருப்பதற்கான உரிமை( 13 ஆம் உறுப்புரை), பேச்சு, தடையின்றி நடமாடுவதற்கான சுதந்திரம் ( 14 ஆம் உறுப்புரை) உள்ளிட்டவை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பரிவிக்குமாரறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றைக் கோரியுள்ளனர்.

அத்துடன் அஹ்னாபின் தடுப்புக் காவலுக்கு எதிராக இடைக்கால தடை விதித்து அவரை உடனடியாக விடுவிக்கவும், மனுவை விசாரணை செய்து நட்ட ஈடாக 100 மில்லியன் ரூபாவைப் பெற்றுத் தருமாறும் மனுதாரர் சார்பில் உயர் நீதிமன்றிடம் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு ஊடாக கோரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *