குறைந்த பட்சம் 3 வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு பங்காளிக் கட்சிகள் கோரிக்கை

(UTV | கொழும்பு) – குறைந்த பட்சம் 3 வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு அரசாங்கத்தின் 10 பங்காளிக் கட்சிகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறைந்த பட்சம் 3 வாரங்களுக்கு நாட்டை மூடாவிட்டால், கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை வைத்தியசாலை கட்டமைப்பால் கட்டுப்படுத்த முடியாதளவுக்கு அதிகரிக்கும் என குறித்த 10 கட்சிகளும் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்கள் மக்கள் சக்தி கட்சியின் அத்துரலிய ரத்தன தேரருடன், ஜனநாயக இடதுசாரி முன்னணி தலைவர் வாசுதேவ நாணயக்கார, லங்கா சம சமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவங்ச, பிவித்துரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா, எக்சத் மஹஜன பெரமுனவின் தலைவர் டிரான் அலஸ், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டொக்டர் ஜீ. வீரசிங்க, ஶ்ரீலங்கா மக்கள் கட்சியின் அசங்க நவரத்ன மற்றும் யுத்துகம தேசிய அமைப்பின் கெவிந்து குமாரதுங்க ஆகியோர் அந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

குறைந்த பட்சம் 3 வாரங்களுக்கு நாட்டை மூடிவைப்பதன் மூலம் கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையை குறைக்க முடியும் எனவும் அரசாங்கத்தின் 10 பங்காளிக் கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன.

நாடு தொடர்ந்தும் திறந்திருந்தால், தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் நோயாளர்களின் அச்சத்தால் நாடு செயற்றிறனை இழக்கும் அபாயம் உள்ளதென ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நோயை கட்டுப்படுத்துவதன் மூலம், மக்களின் நம்பிக்கையை மேம்படுத்தி நாட்டின் பொருளாதார செயற்பாட்டையும் மேம்படுத்த முடியும் என அரசாங்கத்தின் 10 பங்காளிக் கட்சிகளும் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *