(UTV | கொழும்பு) – இலஞ்ச ஆணைக்குழுவில் நாளை (08) முன்னிலையாகுமாறு திருக்குமரன் நடேசனுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உலகப் பெரும் புள்ளிகளின் மறைமுக சொத்துகள் மற்றும் கொடுக்கல் வாங்கல் தொடர்பான இரகசிய விபரங்களை வெளியிட்ட பெண்டோரா ஆவணத்தில் இலங்கையின் தொழிலதிபரான திருக்குமரன் நடேசன் மற்றும் அவரது மனைவியும் முன்னாள் பிரதியமைச்சருமான நிரூபமா ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கையூட்டல் ஆணைக்குழுவின் தலைவருக்கு ஜனாதிபதி நேற்றைய தினம் உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து, ஜனாதிபதியின் உத்தரவுக்கிணங்க, குறித்த ஆணைக்குழுவினால், பெண்டோரா ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள இலங்கையர் தொடர்பான விசாரணைகளுக்காக விசேட விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக்குழுவில் நாளைய தினம் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு திருக்குமரன் நடேசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தம்மீதான குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், இவ்விடயம் தொடர்பில் சுயாதீனமான விசாரணையொன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறுகோரி திருக்குமரன் நடேசன் நேற்றைய தினம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.