சுமார் 42 வருட எதிர்பார்ப்பு நனவாகியது

(UTV |  மெல்போர்ன்) – ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை அஷ்லிக் பார்ட்டி பட்டம் வென்றுள்ளார். இதன்மூலம் 42 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக தங்களது சொந்த நாட்டில் நடக்கும் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பட்டம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இரண்டு முறை கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்றவரும், தற்போதைய உலகின் நம்பர் 1 வீராங்கனையான அஷ்லிக் பார்ட்டி, இன்று இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் டேனியல் காலின்ஸை எதிர்கொண்டார். அஷ்லிக் பார்ட்டி உள்நாட்டு வீராங்கனை என்பதால் அவருக்கு நிறைய ஆதரவு இருந்தது.

அது மட்டுமல்ல, 1980-ல் முன்னாள் ஆஸ்திரேலிய வீராங்கனை கிறிஸ் ஓ நெயில் என்பவரே கடைசியாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை கைப்பற்றியிருந்தார். அதன்பிறகு எந்த வீராங்கனையும் பட்டம் வெல்லவில்லை என்பதால் அவர் மீது நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. அதேநேரம் தரவரிசையில் 27வது இடத்தில் உள்ள, காலின்ஸ்க்கு இது தான் முதல் கிராண்ட் ஸ்லாம் இறுதிப்போட்டி.

இப்படி நிறைய எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடந்த இறுதிப்போட்டி ஒருமணி நேரம் 27 நிமிடம் வரை நீடித்தது. காலின்ஸ் கடும் சவால் அளித்த போதிலும் இறுதியில் 6-3, 7-6 என்ற செட் கணக்கில் அவரை போராடி வீழ்த்தினார் பார்ட்டி. இந்த வெற்றியால் போட்டி நடந்த ராட் லாவர் அரங்கு நெகிழ்ச்சியில் மூழ்கியது.

42 ஆண்டுகால ஆஸ்திரேலியாவின் காத்திருப்புக்கு முடிவுகட்டி கோப்பையை வென்ற அஷ்லிக் பார்ட்டியை அந்நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். அவருக்கு இது மூன்றாவது கிராண்ட் ஸ்லாம் ஆகும். இதற்கு முன்னதாக 2019 பிரெஞ்ச் ஓபன் மற்றும் 2021 விம்பிள்டன் என்று இரண்டு கிராண்ட்ஸ் லாம்களை வென்றுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *