இலங்கையின் 74ஆவது சுதந்திர தினம்

(UTV | கொழும்பு) – இலங்கையின் 74ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறுகின்றன.

‘சவால்களை வெற்றி கொண்ட வளமான நாளையும் சுபீட்சமான தாய்நாடும்” என்ற தொனிப் பொருளில் இம்முறை சுதந்திர தின பிரதான நிகழ்வுகள் நடைபெறுகின்றது.

நாட்டில் கொரோனா தொற்று நிலைமை காணப்படுவதனால் சுகாதார வழிமுறைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு தேசத்தின் அபிமானத்தை காக்கும் வகையில் வழக்கம்போன்று எவ்வித குறைபாடுகளுமின்றி கம்பீரமானதாகவும் எளிமையான முறையிலும் அனைத்து நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

சுதந்திர தின நிகழ்வுகளில் இம்முறை பொதுமக்கள் பங்கேற்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.

சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு கொழும்பு 07 சுதந்திர சதுக்க பிரதேசம் மற்றும் அதனை அண்டிய பகுதிகள் பலத்த பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

21 வீதிகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளதுடன் அதற்கான மாற்று வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

இம்முறை சுதந்திர தின அணிவகுப்புகளில் 3,463 இராணுவத்தினரும் 919 கடற்படையினரும் 804 விமானப் படையினரும் 336 பொலிசாரும் 282 பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் 437 சிவில் பாதுகாப்புப் படையினருமாக 6,500 முப்படை வீரர்கள் மற்றும் பொலிஸார் அணி வகுப்புக்களில் கலந்து கொள்ளவுள்ளனர்.

அத்துடன் விமானப் படையினரின் விமான சாகசங்களும் நடைபெறவுள்ளன. வழமை போன்று இராணுவ, கடற்படை மற்றும் விமானப் படையின் அணிவகுப்புடன் முப்படைகளின் பல்வேறு வகையான கவச வாகனங்களும் இயந்திரங்களும் அணிவகுத்து செல்லவுள்ளன.

சுதந்திரத்திற்காக போராடிய அனைத்து தலைவர்களையும் நினைவு கூர்ந்து இம்முறை சுதந்திர தினத்தன்று மலர் அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *