கோஹ்லிக்கு கொவிட்

(UTV | இந்தியா) – மாலைத்தீவிலிருந்து திரும்பிய பிறகு பிரபல வீரர் விராட் கோஹ்லி கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட், ஜூலை 1 அன்று தொடங்குகிறது. இதற்காக ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட அனைத்து இந்திய வீரர்களும் இங்கிலாந்துக்குச் சென்று பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விராட் கோஹ்லி பங்கேற்கவில்லை. மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து மாலைத்தீவில் விடுமுறையைக் கழித்தார். அங்கிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு லண்டன் சென்ற விராட் கோஹ்லி கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக ஆங்கில ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டதால் இந்திய அணியினருடன் அவர் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் ஜூன் 24 இல் தொடங்கும் பயிற்சி ஆட்டத்திலும் டெஸ்டிலும் அவர் விளையாடுவதில் எவ்விதச் சிக்கலும் ஏற்படாது எனத் தெரிகிறது.

ஏற்கெனவே பிரபல வீரர் அஸ்வினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவரால் இதர வீரர்களுடன் இணைந்து இங்கிலாந்துக்குப் பயணிக்க முடியவில்லை. தற்போது விராட் கோஹ்லி தவிர மேலும் சில வீரர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பயிற்சி ஆட்டத்தில் முனைப்புடன் விளையாட வேண்டாம் எனப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் பிசிசிஐ தரப்பில் விராட் கோலி உள்பட கொரோனாவால் வீரர்கள் சிலர் பாதிக்கப்பட்டது குறித்து அதிகாரபூர்வமாகத் தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *