முட்டை இடும் கோழிகள் இறக்குமதியில் வீழ்ச்சி

(UTV | கொழும்பு) –   கடந்த வருடத்திற்கு இணையாக இவ்வருடமும் முட்டை இடும் கோழிகள் இறக்குமதி செய்யும் அளவு குறைவடைந்துள்ளதன் காரணமாக முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, ராஜாங்க அமைச்சர் வி.பி. ஹேரத் ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

விலங்கு உணவு தட்டுப்பாடு, அவற்றின் விலை உயர்வு, தீவனம் மற்றும் விற்றமின்களின் சடுதியான விலை அதிகரிப்பு என்பனவற்றிற்கு மத்தியில் முட்டை மற்றும் கோழி இறைச்சி தொழில்துறை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த வருடத்தின் ஜூலை மாதமளவில் நாட்டின் முட்டை உற்பத்தி 164 மில்லியன்களாகவும், கோழி இறைச்சி உற்பத்தி 18 மெட்ரிக் டன்னாகவும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

2021 பெரும் போகத்தின் போது, இரசாயன பசளை தடை காரணமாக நாட்டின் சோள உற்பத்தி 90 ஆயிரம் மெட்ரிக் டன்னாக வீழ்ச்சியடைந்தமையே முட்டை மற்றும் கோழி இறைச்சி உற்பத்தி குறைந்தமைக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக விலங்கு உணவு தயாரிப்பிற்காக பயன்படுத்தப்படும் சோளத்திற்கு மாற்றிடாக இறக்குமதி செய்துள்ள அரிசி வகைகளில் ஒரு பகுதியை வழங்குமாறு விலங்கு உணவு உற்பத்தியாளர்கள் விவசாய அமைச்சரிடம் கோரியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *