(UTV | கொழும்பு) – இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்பிக்க மூவர் அடங்கிய குழுவொன்றை இலங்கை கிரிக்கெட் நியமித்துள்ளது. நீதிபதி சிசிர ரத்நாயக்க (ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி), சட்டத்தரணி நிரோஷன பெரேரா மற்றும் சட்டத்தரணி அசேல ரகேவா ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன், அவுஸ்திரேலியாவில் தேசிய அணி தங்கியிருந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல்வேறு சம்பவங்கள் தொடர்பிலும் இந்தக் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், இச்சம்பவம் குறித்து கிரிக்கெட் அமைப்பின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கிரிக்கெட் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவங்கள் குறித்து குழு மேலாளரிடம் உடனடியாக விளக்கம் கேட்கும் என்றும் கிரிக்கெட் அமைப்பு தெரிவித்துள்ளது.
குழுவின் அறிக்கையை சமர்ப்பித்ததன் பின்னர் எந்தவொரு வீரரும் குற்றமிழைத்துள்ளார் என்பது உறுதிசெய்யப்பட்டால் இலங்கை கிரிக்கெட் செயற்குழு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என கிரிக்கெட் அமைப்பு மேலும் தெரிவிக்கிறது.