மூத்த உலமா ஆதம் லெப்பே ஹஸ்ரத் காலமானார் : ஹிஸ்புல்லாஹ், ரிஷாட் அனுதாபம்

(UTV | கொழும்பு) –   காத்தான்குடி ஜாமிஅத்துல் fபலாஹ் அரபுக் கல்லூரியின் உப அதிபரும், காத்தான்குடி ஸபீலுர் ரஷாத் அறபுக் கல்லூரியின் ஸ்தாபகரும், இலங்கை தப்லீக் ஜமாஅத் அமைப்பின் முன்னோடிகளில் ஒருவரும், நாடறிந்த தஃவா பேச்சாளருமான ஆதம் லெப்பே ஹஸ்ரத் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (23.06.2023) மதியம் 02.00 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா பொதுமக்கள் பார்வைக்காக இன்ஷா அல்லாஹ் இன்று வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து காத்தான்குடி மர்கஸில் வைக்கப்படவுள்ளதுடன், ஜனாஸா தொழுகை நாளை சனிக்கிழமை (24.06.2023) காலை 7.30 மணிக்கு காத்தான்குடி – 05 ஜாமிஉல் ழாபிரீன் ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து, அவர்களின் சேவைகளைக் கபூல் செய்து, ஜன்னத்துல் பிர்தெளஸ் எனும் சுவனபதியில் அவர்களுக்கு உயர் அந்தஸ்தை வழங்குவானாக.

மேலும் அவர்களின் குடும்பத்தினருக்கும், காத்தான்குடியிலும், நாடலாவிய ரீதியிலும் அவர்களின் பிரிவால் கவலையுற்றிருக்கும் அனைவருக்கும் அல்லாஹ் பொறுமையை வழங்குவானாக.

“மூத்த ஆலிம் ஆதம் லெப்பை ஹஸரத் அவர்களின் மறைவு கவலை தருகின்றது” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

நாடறிந்த மூத்த ஆலிம் ஆதம் லெப்பை ஹஸரத் (அஷ்ஷைக் பி.எம்.ஹனீபா) அவர்களின் மறைவு நமது சமூகத்துக்கு பேரிழப்பாகுமென்றும் அவரின் மறைவு பெருங்கவலை தருவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஆதம் லெப்பை ஹஸரத் அவர்களின் மறைவையொட்டி, அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டு்ள்ளதாவது,

“காத்தான்குடியின் அரபுக் கல்லூரிகள் பலவற்றின் உஸ்தாதாகவும் பொறுப்பாளராகவும் சிறப்பாகக் கடமையாற்றிய அவர், மார்க்கக் கல்விக்காகவும் இஸ்லாமியப் பிரச்சாரப் பணிக்காகவும் தன்னை முழுமையாக அர்ப்பணித்த பேரறிஞர். தனிப்பட்ட சொந்த வேலைகள், குடும்ப நலனுக்கு அப்பால் இஸ்லாத்தின் எழுச்சியை மதித்த அன்னார், மக்கள் உள்ளங்களில் மார்க்கக் கடமைகளை உணர்த்தி, ஆழமாகப் பதித்தவர்.

அவரிடம் மார்க்கக் கல்வியைக் கற்ற ஏராளமான மாணவர்கள் சிறந்த மார்க்க அறிஞர்களாகவும், உலமாக்களாகவும் திகழ்கின்றனர். இவ்வாறான மார்க்க அறிஞர் ஒருவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர், மாணவர்கள், நண்பர்கள் மற்றும் ஊரவர்களின் கவலையில் நானும் பங்குகொள்கின்றேன். அல்லாஹ்வின் நாட்டப்படி நடந்துவிட்ட இந்த இழப்பை பொறுமையோடு ஏற்றுக்கொண்டு, அன்னாரின் மறுமை பேறுகளுக்காகப் பிரார்த்திப்போம்”

ஆதம் லெப்பை ஹசரத் அவர்களின் மரணச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலை அடைகின்றேன் – முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ்

காத்தான்குடியை பிறப்பிடமாகக் கொண்டு பல்வேறு பட்ட மார்க்கப் பணிகளிலும் ஈடுபட்டு நாடு முழுவதிலும் இஸ்லாமிய பிரச்சாரம் செய்த ஒரு மார்க்க அறிஞர் ஆதம் லெப்பை ஹசரத் அவர்கள். அவரது மரணச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலை அடைகின்றேன் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். மார்க்க விடயங்களை தெளிவுபடுத்துவதில் முதன்மையானவர்.

தஃவா பணிகளில் எல்லோருடனும் பண்பாகவும், அன்பாகவும் பழகக் கூடிய ஒருவர். ஜாமிஅதுல் பலாஹ்வில் கல்வி கற்று அங்கேயே உஸ்தாதாகவும்,தப்லீக் ஜமாஅத் மத்ரசாவில் அதிபராகவும் தப்லீக் ஜமாஅத் மத்ரசாவில் பல்வேறு பட்ட பணிகளிலும் இருந்து தேசிய ரீதியிலும் சமூகப் பணியாற்றியவர். மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக கா.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பின்னர் அவர்களை கல்வி ரீதியாக வழி காட்டுவதற்காக பல்வேறுபட்ட பயிற்சி வகுப்புக்களை நடத்தியவர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *