இஸ்ரேல்-பலஸ்தீன் போர் : பாரிய அழிவுகளை ஏற்படுத்தும்- அமைச்சர் டக்ளஸ்

(UTV | கொழும்பு) –

பேரழிவுகளையும்  உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தி வருகின்ற பாலஸ்தீன் – இஸ்ரேல் யுத்தம் தொடர்பாக கரிசனையை வெளிப்படுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உரிமையும் சமாதானமும் பாலஸ்தீனத்தில் நிலவ வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், பாலஸ்தீன் – இஸ்ரேல் விவகாரத்தின் போக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் என்ற  யதார்த்தத்தினை 1978 ஆம் ஆண்டு அங்கு பயிற்சிக்கு சென்ற போதே தன்னால் உணரக்கூடியதாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இன்று புதன்கிழமை (11) நடைபெற்ற நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

“பாலஸ்தீன மக்களின் உணர்வுகளையும் ஆழ்மன விருப்பங்களையும் நான் நேரில் கண்டிருக்கிறேன். அங்கு நான் ஆயுதப்பயிற்சி எடுத்த வேளை அவர்களது போராட்டத்தில் கூட பங்கெடுத்திருக்கிறேன்.

எமது மண்ணிலும் நானிருந்த எமது அன்றைய ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பே கண்காட்சிகளை நடத்தி பாலஸ்தீன விடுதலைக்கு பகிரங்க ஆதரவை தெரிவித்திருந்தது. போர் வெறியர்களாக அவர்கள் போராட புறப்பட்டவர்கள் அல்ல.

ஒரு கையில் ஒலிவ் மரக்கிளையும் மறு கையில் ஆயுதமும் ஏந்தியுள்ளோம். எது வேண்டும் என்று யசீர் அரபாத் எழுப்பிய கேள்வி சகலரையும் ஈர்த்திருந்தது.

ஒலிவ் மரக்கிளை அங்கு சமாதானத்தின் சின்னம், அத்தகைய வழிமுறையே சிறந்ததென நானும் கருதியவன், ஆனாலும் அன்றே நான் நினைத்திருந்தேன் அவர்களது பயணத்திலும் மாற்றங்கள் தேவையென்று, பாலஸ்தீனத்தை பாடமாக ஏற்று எமது போராட்டத்தை நடத்த வேண்டும் என்று நான் அன்று கருதியதுண்டு, பாலஸ்தீன மக்களும் இன்று எமது போராட்ட  படிப்பினைகளை வைத்து பயணிக்க வேண்டும்.

போர் மேகங்கள் அங்கு  சூழ்ந்துள்ளன, எந்த தரப்பும் பொது மக்களை பாதுகாப்பதில் அக்கறை காட்ட வேண்டும்.

இதேவேளை பாலஸ்தீன மக்களின் உரிமைகள் வழங்கப்பட வேண்டும், நிரந்தர சமாதானம் அங்கு நிலவ வேண்டும், மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தமென்ற உரிமம் பாலஸ்தீனத்தில் மட்டுமல்ல எங்கும் நிலவ வேண்டும் என்று  தெரிவித்தார்.

அதேவேளை, பலஸ்தீன விவகாரத்தினை போன்றே எமது மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு சரியான வழிமுறையை முன்கூட்டியே – 30 வருடங்களுக்கு முன்னர் தன்னால் முன்மொழியப்பட்டபோது ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் தற்போது, பேரழிவுகளுக்கு பின்னர் ஏற்றுக்கொண்டிருப்பதையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.

மேலும், ஆசிரியர் கலாசாலையின் பயிற்சி ஆசிரியர்களும் யதார்த்தத்தினை புரிந்து கொண்டு எமது எதிர்கால சந்ததியினரை சரியாக வழிநடத்த வேண்டும் எனபதே தன்னுடைய எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *