தமிழ் வாக்குகளுக்காக இராணுவத்தைக் ரணில் காட்டிக் கொடுக்கின்றார் – விமல் வீரவன்ச

(UTV | கொழும்பு) –

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வாக்குகளை பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இராணுவத்தினரை காட்டிக் கொடுக்கும் சட்டங்களை இயற்ற முயற்சிக்கிறார். சரத் பொன்சேகாவை தவிர ஏனைய இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் வகையில் உண்மையை கண்டறிதல் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்ட வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடியால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டுக்கு எதிரான கீழ்த்தரமான செயற்பாடுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் முன்னெடுத்துள்ளனர். 2015 ஆம் ஆண்டு அப்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு இணை அனுசரனை வழங்கினார். இந்த தீர்மானத்தை நாட்டு மக்களும்,பாராளுமன்றமும் அப்போது அறிந்திருக்கவில்லை.

நாட்டுக்கு எதிராக ஒப்பந்தங்கள் மற்றும் தீர்மானங்களில் இருந்து விலகுவதாக 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ராஜபக்ஷர்கள் மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார்கள்.அந்த வாக்குறுதிகளுக்கு அமைய கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை நாட்டு மக்கள் தோற்றுவித்தார்கள். இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு இணையனுசரனை வழங்கும் இணக்கப்பாட்டில் இருந்து இலங்கை விலகியுள்ள நிலையில் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்களில் பல சட்ட வகிபாகத்துடன் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம்,2017 ஆம் ஆண்டு நாடு கடத்தல் சட்டம்,இழப்பீட்டுக்கான அலுவலக சட்டம், பலவந்தமாக தடுக்கும் சட்டம், பாதிக்கபபட்டோர் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டம் என்பன இயற்றப்பட்டுள்ளன. அண்மையில் பாராளுமன்றத்தில் ஒற்றுமை மற்றும் தேசிய நல்லிணக்கத்துக்கான சட்டம் இயற்றப்பட்டுள்ளன. உண்மையை கண்டறிதல் மற்றும் தேசிய நல்லிணக்கத்தை ஸ்தாபித்தல் ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் சட்ட வரைபுக்கான வர்த்தமானி புதுவருட தினத்தன்று வெளியிடப்பட்டுள்ளன. புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச நாடுகளின் பணிப்புரைக்கு அமைய 2015 ஆம் ஆண்டு முதல் திருட்டுத்தனமாக இயற்றப்பட்ட சட்டங்கள் அனைத்தையும் வலுப்படுத்தும் வகையில் உண்மையை கண்டறிதல் மற்றும் தேசிய நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்துக்கு அமைய ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டால் தற்போது நடைமுறையில் உள்ள சாட்சி கட்டளைச் சட்டம் வலுவிழக்கப்படும். இராணுவத்தினருக்கு எதிராக எவர் வேண்டுமானாலும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கலாம். பொய் சாட்சியம் வழங்கலாம்.சரத் பொன்சேகாவை தவிர ஏனைய இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும்.

தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இராணுவத்தினரை காட்டிக் கொடுக்கும் வகையில் செயற்படுகிறார். ஆச்சரியம் என்னவென்றால். யுத்த வெற்றியை பிரதான தேர்தல் பிரசாரமாக கொள்ளும் ராஜபக்ஷர்கள் இராணுவத்தினருக்கு எதிரான சட்டமூலங்களுக்கு ஆதரவாக செயற்படுகிறார்கள். ஆகவே இந்த சட்டமூலத்துக்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *