கோட்டாவின் முறையற்ற வேலைத்திட்டமே பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் – ஆஷு மாரசிங்க

(UTV | கொழும்பு) –

2024 வாழ்க்கைச் செலவை தளர்த்தும் வருடமாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.அதனால் கொவிட் மற்றும் கோத்தாபய ராஜபக்ஷ்வின் முறையற்ற பொருளாதார வேலைத்திட்டம் காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் ஆரம்பித்து நாட்டின் வருமானத்தை அதிகரிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருக்கிறார் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதார அபிவிருத்தி வேகம் இந்த வருடத்தில் நூற்றுக்கு 2 வீதம் அதிகரித்துக்கொள்ள முடியும் அதேநேரம் 2025ஆம் ஆண்டில் அதனை நூற்றுக்கு 5 வீதமாக அதிகரித்துக்கொள்வதே அரசாங்கத்தின் இலக்காகும். இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக 2017லே நாட்டின் மொத்த வருமானம் 1914 பில்லியனாக இருந்ததுடன் ஆரம்ப செலவு 1892 பில்லியனாக இருந்தது. இதன் மூலம் ஆரம்ப கணக்கீட்டில் 22 பில்லியன் ரூபா மீதமாகி இருந்தது.

இவ்வாறு இருந்த நாடு, 2022 ஆகும்போது மொத்த தேசிய வருமானம் 2013 பில்லியனாகவும் ஆரம்ப செலவு 2908 பில்லியனாகவும். இருந்தது. அதனால் ஆரம்ப கணக்கில் 895 பில்லியன் ரூபா மறை பெருமானத்திலே இருந்தது. அதன் பிரகாரம் 2022இல் எமது அத்தியாவசிய செலவுகளுக்கு கூட எமக்கு பணம் இருக்கவில்லை. அத்துடன் 2023இல் சர்வதேச நாணய நிதியம் எமது தேசிய வருமானத்தை 2850 பில்லியனாக அதிகரிக்க வேண்டும் என்ற இலக்கை வழங்கி இருந்தது. அப்போது எமது ஆரம்ப செலவு 3063 பில்லியன் ரூபாவாக இருந்தது. அதன் பிரகாரம் எமது ஆரம்ப கணக்கீட்டு தொகை 209 பில்லியன் ரூபா மறை பெருமானத்துக்கு செல்லும் என்றே நாணய நிதியம் எதிர்வு கூறியிருந்தது.

என்றாலும் ஜனாதிபதியின் திறமையாலும் அரச வருமானத்தை அதிகரிக்கும் நிறுவனங்களின் செயற்திறமையினாலும் 2023 இல் தேசிய வருமானத்தை 3,115 பில்லியனாக அதிகரிக்க முடியுமாகி இருந்தது. அதன் ஆரம்ப செலவுகள் 3063 பில்லியனாகும். அதன் பிரகாரம் 2023 இல் எமது ஆரம்ப கணக்கீட்டில் 52 பில்லியன் ரூபா நேர் பெருமானத்தை அதிகரித்துக்கொள்ள முடியுமாகி இருந்தது. அதன் காரணமாகவே அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் வழங்குவதாக இருந்த 10 ஆயிரம் கொடுப்பனவில் 5 ஆயிரம் ரூபா ஜனவரியில் வழங்க முடியுமாகி இருந்தது. எஞ்சிய 5ஆயிரம் ரூபாவை ஏப்ரல் மாதத்தில் இருந்து வழங்க முடியுமாகும்.

அத்துடன், 2024 இல் மொத்த தேசிய லருமானத்தை 4,117 பில்லியனாக அதிகரிப்பதே எமது இலக்காகும். ஆரம்ப கணக்கீட்டில் 250 பில்லியன் ரூபா நேர் பெருமானமாக அதிகரித்துக்கொள்ள வேண்டும் என நாணய நிதியம் தெரிவித்திருக்கிறது. இது மிகவும் சவாலான விடயமாகும். ஏனெனில் 2024 வாழ்க்கைச்செலவை தளர்த்தும் வருடமாக தெரிவித்திருக்கிறார். என்றாலும் அந்த சவாலை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

ஏனெனில், 2023 இல் சுற்றுலா பயணிகள் 15லட்சம் பேர் நாட்டுக்கு வந்திருக்கிறார்கள். ஜனவரி 15 ஆம் திகதிவரை 5 இலட்சம் சுற்றுலா பயணிகள் வந்திருக்கிறார்கள். அதன் பிரகாரம் 2024 முடிவடையும்போது 25இலசம் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருவார்கள் என நாங்கள் நம்புகிறோம். அதேபோன்று வெளிநாட்டு செலாவணி கடந்த வருடத்தை விட நூற்றுக்கு 53வீதம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

எனவே, நாட்டின் வருமானம் படிப்படியாக அதிகரித்துக்கொண்டு செல்கிறது. அதன் பிரகாரம் 2024 வாழ்க்கைச் செலவை தளர்த்தும் வருடம் என்றவகையில் அதனை செய்ய முடியுமாகும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிநது. கடந்த காலங்களில் கொவிட் மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ்வின் முறையற்ற பாெருளாதார வேலைத்திட்டம் காரணமாக சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டன. அந்த தொழிற்சாலைகளை மீண்டும் செயற்படுத்துவதற்கு தேவையான சூழலை ஜனாதிபதி ஏற்படுத்தி இருக்கிறார். ஜனாதிபதியின் இந்த வேலைத்திட்டங்களை ஜப்பான் நிதி அமைச்சர் பாராட்டி இருந்ததுடன் கடந்த காலங்களில் நிறுத்தப்பட்டிருந்த வேலைத்திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் ஜனாதிபதியிடம் உறுதியளித்திருக்கிறார் என்றார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *