சுதந்திர தின நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தாய்லாந்து பிரதமர்- கைச்சாத்தாகும் ஒப்பந்தம்

(UTV | கொழும்பு) –

இலங்கையின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் கலந்துகொள்ளவுள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில், அம்மாதம் 3ஆம் திகதி தாய்லாந்து பிரதமர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுவிஸ் மற்றும் உகண்டா செல்வதற்கு முன்னர் சில முக்கிய சந்திப்புகளை நாட்டில் முன்னெடுத்திருந்தார். இதில் முக்கியமான ஒன்றாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ள சுதந்திர தின நிகழ்வு ஏற்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இதன்போதே சுதந்திர தினத்தின் விசேட விருந்தினராக தாய்லாந்து பிரதமரை அழைத்துள்ளமை குறித்து தகவல் வெளியிட்டார்.
மேலும் இலங்கையின் வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் நினைவு பதிப்பொன்றை அச்சிட்டு வழங்கவும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். இதேவேளை சுதந்திர தினத்தினை ‘புதிய நாட்டை கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளில் அனுஷ்டிப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது. எவ்வாறாயினும் தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் தலைமையிலான உயர் மட்ட குழுவினரின் இலங்கை விஜயத்தின்போது இரு நாடுகளுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்குறிப்பிட்ட கலந்துரையாடலின்போது உறுதிப்படுத்தினார்.

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடனான ஒப்பந்தங்களைத் தொடர்ந்து இது இலங்கையின் நான்காவது சுதந்திர வர்த்தக ஒப்பந்தமாகும். இதனூடக தேயிலை, தேங்காய் பால் மற்றும் ஆடை உற்பத்தி போன்ற முக்கிய ஏற்றுமதிகளில், தாய்லாந்து சந்தையில் வரி இல்லாத அணுகலை இலங்கை பெறும்.

தாய்லாந்து உடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இதுவரையில் இருதரப்பினருக்கும் இடையில் எட்டு சுற்று பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு இறுதி இலக்கை அடைந்துள்ளன. மறுப்புறம் இந்தியாவுடன் காலதாமதமான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நிறைவு செய்வதற்கும், சீனாவுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் தாய்லாந்துடனான ஒப்பந்தம் சிறப்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தாய்லாந்து மிகவும் நெகிழ்வான மற்றும் புரிதலுடன் செயல்பட்டமை உள்ளிட்ட இரு நாடுகளுக்கு இடையிலான கலாச்சார இணைப்புகள் முக்கியத்துவம் பெற்றிருந்ததாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.

எவ்வாறாயினும் ஒப்பந்தத்தின் பின்னர் பல ஏற்றுமதி பொருட்களுக்கான தாய்லாந்து சந்தையில் உடனடி வரியில்லா அணுகலை இலங்கை பெறுகிறது. உதாரணமாக, தாய்லாந்து, இலங்கை தேயிலைக்கான ஒதுக்கீட்டை பராமரிக்கும் போது (வரம்புக்கு அப்பால் எந்த இறக்குமதியும் அனுமதிக்கப்படாது), மேலும் அதன் மீது விதிக்கப்பட்டுள்ள 30 சதவீத வரியை நீக்குவதுடன், உலர் தேங்காய் மீதான 54 சதவீத வரியை தாய்லாந்து நீக்கும்.

வௌ;வேறு வகைகளில் வரும் தேங்காய்ப் பாலை இரு நாடுகளும் சுங்க வரியின்றி இறக்குமதி – ஏற்றுமதி செய்யும். இலங்கை வரியில்லா அனுமதி கோரிய 15 வகையான ஆடைகளுக்கான வரிகளை தாய்லாந்து தள்ளுபடி செய்யும். இதில் உள்ளாடைகள் மற்றும் பிற சிறப்புப் பொருட்களும் அடங்குகின்றன. ஒப்பந்தம் ஊடாக தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகியவை 15 ஆண்டுகளில் அதிக கட்டண தாராளமயமாக்கல் திட்டத்துக்கு உறுதியளித்துள்ளன. தாய்லாந்தில் சுமார் 11,000 கட்டண வரிகள் உள்ளன. அதே வேளை இலங்கையில் சராசரியாக 8,500 கட்டண வரிகள் உள்ளன. இரு நாடுகளும் இவற்றில் 80 சதவீதத்தை தாராளமயமாக்குவதுடன் 5 சதவீதத்தை ஓரளவு தாராளமயமாக்கும். மீதமுள்ள வீதம் எதிர்மறையான பட்டியலில் இருக்கும்.

எதிர்மறை பட்டியல்களில் எந்த சலுகைகளும் (இறக்குமதி கட்டணங்களில் குறைப்பு) அனுமதிக்கப்படாத உருப்படிகள் உள்ளன. தற்போது, இலங்கையின் எதிர்மறையான பட்டியல்களில் விவசாயம் மற்றும் மீன்பிடி பொருட்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன.
தாய்லாந்துடனான பேச்சுவார்த்தைகள் முதலில் 2015 – 2017 ஆண்டுகளில் தொடங்கப்பட்டன. அப்போது மூன்று சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால் சீனா மற்றும் இந்தியா உட்பட அனைத்து நாடுகளுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளையும் 2018க்குப் பிறகு இலங்கை நிறுத்தி வைத்தது. இவ்வாறானதொரு நிலையிலேயே தாய்லாந்துடனான பேச்சுவார்த்தைகள் 2023ஆம் ஆண்டு ஜனவரியில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

இதற்கிடையில், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவுடன் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8-10 திகதிகளில் கலந்துரையாடல்களை இலங்கை முன்னெடுத்திருந்தது. இது இருதரப்புக்கும் இடையிலான 13ஆவது சுற்று பேச்சுவார்த்தைகளாகும். மறுபுறம் சீனாவுடனான உத்தேச சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *