மனோராஜபக்சர்களின் அட்டூழியங்களை மன்னிக்க நாம் தயார் இல்லை – மனோ கணேசன்

(UTV | கொழும்பு) –

ஒரு கையால் ராஜபக்சர்களை அணைத்தபடி மறுகையால் எம்மை அழைக்காதீர்கள் – புதிய கூட்டணிகள் பற்றி மனோ ராஜபக்சர்களின் அட்டூழியங்களை மன்னிக்க நாம் தயார் இல்லை. ஆகவே ஒரு கையால் ராஜபக்சர்களை கட்டி அணைத்தப்படி மறுகையால் எம்மை சுட்டி அழைக்க வேண்டாம். நாம் இன்று இருக்கும் இடத்தில் செளக்கியமாக இருக்கிறோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

நாட்டில் உருவாகிவரும் புதிய கூட்டணிகளிடமிருந்து தமது அணியை நோக்கி வரும் அழைப்புகள் பற்றி,  தென்கொழும்பு கட்சி அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது, கோட்டாபய ராஜபக்ச போனாலும், அவரது பாவத்தின் நிழல் போகவில்லை. சட்டப்படி கோட்டாபய ராஜபக்ச 16ம் திகதி நவம்பர் 2019 தேர்தலில் பெற்ற மக்கள் ஆணையுடன்தான் இந்த அரசு நடக்கிறது. அந்த பாவத்தில் எமக்கு பங்கு வேண்டாம்

நேற்று முதல் நாள் அறிவிக்கப்பட்ட புதிய கூட்டணி நண்பர்கள் என்னுடன் பேசிய போது தெளிவாக ஒன்றை சொன்னேன். ஒரு கையால் ராஜபக்சர்களை கட்டி அணைத்தப்படி மறுகையால் எம்மை சுட்டி அழைக்க வேண்டாம் என்று சொன்னேன். நாம் இன்று இருக்கும், ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற இடத்தில் நாம் செளக்கியமாகவே இருக்கிறோம் எனவும் சொன்னேன்.

தமிழ் முற்போக்கு கூட்டணி நினைத்து இருந்தால், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி ஆகிய அடுத்த நாளே அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கலாம். ஆனால், அதை நாம் செய்யவில்லை. ஏனென்றால் பேரினவாதம், ஊழல் ஆகிய இரண்டு பேரழிவுகளுக்கும் ஏகபோக உரிமையாளர்களான ராஜபக்சர்களுடன் கலப்பு கல்யாணம் செய்ய தமிழ் முற்போக்கு கூட்டணி தயார் இல்லை. எங்கள் இந்த கொள்கை நிலைப்பாடு காரணமாகத்தான் நாம் இன்று ராஜபக்ச ஆதரவு ரணில் அரசாங்கத்தில் இடம்பெறவில்லை.

இன்று இந்த ராஜபக்ச ஆதரவு ரணில் அரசில் அங்கம் வகிப்பவர்கள், தாம் ஏதோ வெட்டி முறித்து விட்டதாக தப்பு கணக்கு போட்டு விடக்கூடாது. நாம் அங்கே கொள்கை நிலைப்பாடு காரணமாக இல்லை. ஆகவேதான் நீங்கள் அங்கே இருக்கிறீர்கள். அதுதான் உண்மை. சட்டப்படி கோதாபய ராஜபக்ச 16ம் திகதி நவம்பர் 2019 தேர்தலில் பெற்ற மக்கள் ஆணையுடன்தான் இன்றுவரை இந்த அரசு தொடர்கிறது. அந்த பாவத்தின் நிழலில் அங்கமான உங்களுக்கு பாவத்தின் சம்பளம் அடுத்த தேர்தலில் கிடைக்கும்.

16ம் திகதி நவம்பர் 2019 முதல் இன்றுவரை, நான்கு வருடங்கள், இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. கடந்த நான்கு வருடங்களாக இந்த அரசாங்கத்தின் பதவிகளில்  இருக்கின்ற தமிழ் அரசியல்வாதிகளிடம், நீங்கள் இதுவரை வெட்டி முறித்த சாதனைகளை முடியுமானால் பட்டியல் இடுங்கள் என பகிரங்க சவால் விடுகிறேன்.

அபிவிருத்தி செய்ய நிதி இல்லை என்பீர்கள். சரி, அபிவிருத்தியை விடுங்கள். அரச நிர்வாகரீதியாக தமிழ் மக்கள் தொடர்பில் நீங்கள் அமைச்சர்களாக, துணை அமைச்சர்களாக, அரசாங்க எம்பிகளாக இதுவரை என்ன செய்து கிழித்துள்ளீர்கள் என பகிரங்கமாக சொல்லுங்கள்? வேண்டுமானால், நாம் ஆட்சியில் இருந்த நான்கு ஆண்டுகளில் நாம் செய்த சாதனைகளையும், இன்று நீங்கள் இந்த நான்கு ஆண்டுகளில் செய்ய தவறிய சீர்கேடுகளையும் நான் பகிரங்கமாக பட்டியல் இடுகிறேன்.

எனவேதான், இந்த புதிய, பழைய பாவங்களின் கூட்டணியில் நாம் இல்லை. நாங்கள் சோரமும் போகவில்லை. பாவமும் செய்யவில்லை. ஆகவே இந்த பாவத்தின் சம்பளம் எமக்கு கிடையாது. எனவே தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற முற்போக்கு அரசியல் இயக்கம், அடுத்து வரும் புதிய அரசாங்கத்தில், புதிய பலத்துடன், நேர்மையாக அங்கம் வகிக்கும் என மேலும் தெரிவித்தார்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *