மருதமுனை இரட்டை படுகொலை சந்தேக நபரான தந்தையை 14 நாட்கள் விளக்கமறியல்

மருதமுனை இரட்டை படுகொலை சந்தேக நபரான தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாக்கியதுல் சாலியா வீதியில் உள்ள வீட்டில் படுகொலை செய்யப்பட்ட இரு பிள்ளைகளின் வழக்கு தொடர்பில் இன்று (28) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் பெரிய நீலாவணை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அப்பிள்ளைகளின் தந்தை மன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பொலிஸார் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணி ஆகியோரின் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு 63 வயதுடைய குறித்த சம்பவத்தில் மரணமடைந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான முஹம்மது மிர்சா முகமது கலீல் என்பவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்திப் பின்னணி

இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்று தற்கொலை முயற்சி மேற்கொண்ட தந்தை

இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்று தற்கொலை முயற்சி மேற்கொண்ட தந்தை தொடர்பிலான செய்தி அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினமான மார்ச் வியாழக்கிழமை (14) காலை பெரிய நீலாவணை முஸ்லீம் பிரிவு பாக்கியதுல் சாலியா வீதியில் உள்ள வீட்டில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவ இடத்தில் இரு பிள்ளைகளின் சடலம் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டது.

அத்துடன் தனது மனவளர்ச்சி குன்றிய இரு பிள்ளைகளை கொன்று தற்கொலையில் ஈடுபட்ட தந்தையும் காயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவத்தில் முஹம்மது மிர்சா முகமது கலீல் (வயது-63) தற்போது காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் முஹம்மது கலீல் முகம்மது றிகாஸ்(வயது-29) முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா(வயது-15) ஆகியோர் சம்பவ இடத்தில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தவர்களாவர்.குறித்த மரணமடைந்த பிள்ளைகளின் தாய் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் மரணமடைந்திருந்ததாக மேலதிக விசாரணைகளில் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )