எதிர்வரும் தேர்தலின்போது வரலாற்றில் பாடம் கற்றுக்கொண்டு விழுந்த குழியில் மீண்டும் விழாமல் புத்திசாலித்தனமான தீர்மானம் எடுப்பது நாட்டு மக்களின் பொறுப்பாகும். அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு யாருக்கும் முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார்.
பேரிவலை பிரதேசத்தில் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
ஜனாதிபதித் தேர்தல் எமது நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் நடத்தப்பட வேண்டும். அதனை மாற்ற முடியாது. தேர்தல் தொடர்பில் அறிவிக்கும் பாெறுப்பு தேர்தல் ஆணைக்குழுவுக்கே இருக்கிறது.அரசியல்வாதிகள் அதுதொடர்பில் முடிவெடுக்க முடியாது.
அதேநேரம் இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற தேர்தலை நடத்தத் தேவையில்லை என்று கூறியிருப்பது தொடர்பில் நான் ஆச்சரியப்படுகிறேன். ஜனநாயகம் தொடர்பில் கடுகளவேனும் மரியாதை இருப்பவர்களின் நாவினால் இவ்வாறான கூற்று வரமுடியாது. அரசியலில் பொறுப்பு வாய்ந்த பதவியை வகிக்கும் ஒருவரின் நாவினால் இவ்வாறான வார்த்தை வெளிவருவதென்றால், அவர் ஹிட்லரின், மொசாட்டின் உறவினராகவே இருக்கவேண்டும் என்றே நான் காண்கிறேன்.
வரவிருக்கும் தேர்தலில், மக்கள் வரலாற்றில் நடந்த விடயங்களை நினைவில் வைத்து, அவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு, புத்திசாலித்தனமான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும். தேர்தல் ஒன்று வரும்போது எப்போதும் ஏதாவது பூச்சாண்டி காட்டுவதை நாங்கள் காணிக்கிறோம். அது தேசிய அரசியல் குறுகிய நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக இருக்கும். சில சந்தர்ப்பங்களில் அது சர்வதேச அரசியலில் குறுகிய நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக அமைந்திருக்கும்.
இதனை நாங்கள் உலக அரசியலிலும் காண்கிறோம். இலங்கை அரசியலிலும் காண்டிருக்கிறோம். மக்களின் உயிர்கள். அரசியல்வாதிகளின் உயிர்கள் தொடர்பில் கண்டுகொள்ளாமல் குறுகிய நோக்கங்களை அடைந்துகொள்ள முயற்சிக்கின்றனர்.
அதனால் நாங்கள் 30 வருட கொடூர யுத்தத்துக்கு நீண்டகாலம் முகம்கொடுத்திருக்கிறோம். வரலாற்றில் பாடம் கற்றுக்கொண்டு மீண்டும் விழுந்த குழிகளில் விழாமல் புத்திசாலித்தனமான தீர்மானம் எடுப்பது நாட்டு மக்களின் பொறுப்பாகும். அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு யாருக்கும் முடியாது என்றார்.