விவாகரத்து மற்றும் விவாகரத்து ஆணையை வழங்குவதற்காக பெண்ணொருவரிடம் 4,500 ரூபாய் இலஞ்சம் கோரிய போது, கண்டி-உடதலவின்ன பகுதியில் வைத்து காதி நீதவான் ஒருவர், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த காதி நீதவான் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜாஎல்ல கும்பக்கடுர பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி உடதலவின்ன பகுதிலுள்ள காதி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு வழங்குவதற்காகவே அந்த பெண்ணிடம் காதி நீதவான், 4,500 ரூபாய் இலஞ்சம் கேட்டள்ளார்.
இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு உத்தியோகத்தர்களால் உடதலவின்ன காதி நீதிமன்றத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்குரிய காதி நீதவான் கைது செய்யப்பட்டுள்ளார்.