இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவரின் மரணம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவரின் மரணம் தொடர்பில் இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.

அவரது இறுதிக் கிரியைகள் இந்நாட்டில் நடைபெறுமா? அல்லது அவரது உடல் பிரான்ஸுக்கு எடுத்துச் செல்லப்படுமா? என்பது குறித்து இன்று (27) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் Jean Francois Pactet இராஜகிரியில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்த நிலையில், நேற்று பிற்பகல் வெலிக்கடை பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

திடீர் சுகவீனம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது 56 ஆவது வயதில் பிரான்ஸ் தூதுவர் இவ்வாறு உயிரிழந்தார்.

1970 ஆம் ஆண்டு பிறந்த Jean Francois Pactet, 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவராக கடமையாற்றி வந்தார்.

தொழில் ரீதியான இராஜதந்திரியான அவர் முன்னர் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகத்தில் கலாச்சாரம் மற்றும் கல்விக்கான துணை இயக்குநர் போன்ற பதவிகளை வகித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *