வாகன இறக்குமதியை மீள அங்கீகரிப்பது: பரிந்துரைகள் ஜனதிபதியிடம் கையளிப்பு… நடக்கப்போவதென்ன!

வாகன இறக்குமதியை மீள அங்கீகரிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவின் பரிந்துரைகள் நிதிக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, வாகன இறக்குமதித் தடையை நான்கு நிலைகளில் தளர்த்துமாறு குழு பரிந்துரைத்துள்ளதாகவும், அதற்கான கால அவகாசமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், உரிய நிபந்தனைகளை ஆராய்ந்த பின்னர் இது தொடர்பான இறுதித் தீர்மானம் ஜனாதிபதியால் எடுக்கப்படும் எனவும் தெரியவந்துள்ளது. 

வாகன இறக்குமதிக்காக வெளிநாட்டு கையிருப்பு விடுவிக்கப்பட்டால், வருடாந்தம் 340 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சுங்க வரி மூலம் அரசாங்கம் பெற முடியும் என நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளின் பிரதிநிதிகள் அடங்கிய இந்தக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. 

இதன்படி, முதலில் வர்த்தக வாகனங்கள், பின்னர் பொது போக்குவரத்து சேவை வாகனங்கள், பின்னர் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் இறுதியாக கார்கள் மற்றும் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பிலும் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை அரசாங்கம் படிப்படியாக தளர்த்தினால், வெளிநாட்டு கையிருப்பை நிர்வகிக்கும் வாய்ப்பு இருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவும் கடந்த செவ்வாய்கிழமை செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

2020ஆம் ஆண்டு மட்டுப்படுத்தப்பட்ட வாகன இறக்குமதிக் கட்டுப்பாடு நடைமுறைக்கு வந்து நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையில், கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு மக்களிடமும் வாகன விற்பனையாளர்களிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது, உள்நாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகன சந்தையில் வாகனங்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால், முக்கியமான சந்தை நிலவரங்களை ஆராய்ந்து, உரிய முடிவுகளை எடுத்து, வாகன இறக்குமதிக்கு தடை விதிப்பது குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *