நூருல் ஹுதா உமர்
கடந்த 57 நாட்களாக இலங்கையில் உள்ள அனைத்து பல்கலைக்கலகங்களினதும் கல்விசாரா ஊழியர்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகின்றனர். அவர்களது போராட்டம் உக்கிர கட்டத்தை அடைந்துள்ள நிலையில் சுழற்சி முறை உண்ணாவிரத போராட்டம், சத்தியாகிரக போராட்டம் என நாளுக்கு நாள் வீரியம் அடைந்து செல்கின்றன.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2024.06.27 ஆம் திகதி ஒருபக்கம் ஊழியர்களின் சத்தியாகிரக போராட்டம், மறுபுறம் நியாயம் கோரி பேரணி என பல்கலைக்கழக முற்றலை அதிர வைத்தன.
இங்கு கருத்து தெரிவித்த தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் எம்.ரி.எம். தாஜுடீன் மற்றும் ஊழியர் சங்கத்தின் செயலாளர் முகமது காமில் ஆகியோர் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக அரசு எங்களுக்கான நியாயமான கோரிக்கையை பூர்த்தி செய்து பல்கலைக்கழகத்தை சுமூக நிலைக்கு கொண்டு வராது நமது நாட்டின் சொத்துக்களான மாணவர்களது கல்வி முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கின்றது.
அரசியல் நோக்கங்களுக்காக பல மில்லியன்களை செலவிடும் அரசு; நாட்டின் அபிவிருத்திக்கு துணைநின்று, உதவக்கூடிய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு கைகொடுக்கும் பல்கலைக்கழகங்களின் பிரச்சனைகளை கண்டறிந்து அவைகளுக்கு தீர்வை வழங்காது அரச பல்கலைக்கழகங்களை வீழ்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முயச்சிப்பதாகவும். இங்கு பணிபுரியும் ஊழியர்களின் பின்னாலும் கணிசமான வாக்குகள் இருப்பதை சம்மந்தப்பட்டவர்கள் உணரவேண்டும் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.