“ஜனாதிபதி தேர்தலை நடத்த இடைக்கால தடை மனு: ரணில் வெளியிட்ட அறிவிப்பு”

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி சமிந்திர தயான் லெனவ என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

மேற்படி மனுவை தாக்கல் செய்வதன் மூலம், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் பிரிவு 12(1), 82(6), 3, 4, 118 மற்றும் 125 ஆகிய பிரிவுடன் வாசிக்கப்பட வேண்டிய 126 இன் படி அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் 3ஆம் பிரிவின் ஊடாகத் திருத்தப்பட்ட பிரிவு 30(2)ஐ வியாக்கியானம் செய்யக்கூடாது என குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்பதைக் கருத்தில் கொண்டு தேர்தல் ஆணைக்குழு அடுத்த ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என்பதால் உயர் நீதிமன்றத்தினால் இது குறித்த இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையில், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான மேலதிக பணிகள் முன்னெடுக்கப்படுவதைத் தடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பு குறித்த மனுவில் கோரியுள்ளது.

இந்த மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்னர் மனுதாரர் தன்னிடமோ அல்லது தனது சட்டத்தரணிகளுடன் கலந்தாலோசிக்கவோ ஆலோசனை பெறவோ இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்பதோடு 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருப்பது சரியானது என்பதே தனது உறுதியான நிலைப்பாடாகும் என்பதையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு