ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை – ஹமாஸ் தகவல்.

பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பின் தலைவராகக் கருதப்படும் இஸ்மயில் ஹனியே, ஈரானில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் தங்கியிருந்த வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு இஸ்ரேல் இதுவரை பதிலளிக்கவில்லை.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தங்கள் குழுவின் முக்கியத் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதாக ஹமாஸ் குழு தெரிவித்துள்ளது.

ஈரான் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்ற அவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளர்.

இது குறித்து ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில், “சகோதரர், தலைவர், போராளி இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடந்த இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார்” எனத் தெரிவித்துள்ளது.

ஈரானின் புரட்சிகர படைகளும் இந்தச் சம்பவத்தை உறுதி செய்துள்ளது. ஹனியே தங்கியிருந்த இடத்தைக் குறிவைத்து இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் அவரும், அவரது மெய்க்காப்பாளரும் கொல்லப்பட்டனர் என்று ஈரானிய புரட்சிப் படைகள் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலை அடுத்து இஸ்ரேல் – ஹமாஸ் படைகளுக்கு இடையே பல மாதங்களாக போர் நீடித்து வருகிறது.

இதில் இதுவரை உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை கடந்துள்ளது. 1 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டார் என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்மாயில் ஹனியே கடந்த 1987 ஆம் ஆண்டு ஹமாஸ் படையில் இணைந்தார். இஸ்ரேலுக்கு எதிரான முதல் புரட்சியில் அவர் பங்கேற்றார். 1993 வரை நடந்த அந்த மோதலில் அவர் முக்கியப் பங்காற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *