ஜனாதிபதிக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு.

சுயாதீன வேட்பாளர் என்று அறிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிதி மற்றும் சொத்துக்களை தவறான வகையில் பயன்படுத்தி ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரங்களை முன்னெடுக்கிறார்.

தேர்தல் சட்டத்துக்கு அமைய செயற்படும் ஏனைய வேட்பாளர்களுக்கு இதனால் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஆகவே இவ்விடயம் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு புதிய சுதந்திர முன்னணி தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளது.

புதிய சுதந்திர முன்னணி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்வைத்துள்ள முறைப்பாட்டில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ள ஜனாதிபதியும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவினால் தேர்தல்கள் சட்டம் மீறப்படுகிறது.

நேற்று செவ்வாய்க்கிழமை (30) ஜனாதிபதி ஊடக பிரிவினால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய,சுயாதீன ஜனாதிபதி வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்க,பிரதமர் தினேஷ் குணவர்தன,பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உட்பட ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை ஜனாதிபதி செயலகத்துக்கு அழைத்து இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு ஆதரவு வழங்குவது குறித்து பேசியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைக்கு உரிய புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் உத்தியோகபூர்வ ஊடக அறிக்கைகளை ஜனாதிபதி ஊடக பிரிவு முழுமையாக பிரச்சாரம் செய்துள்ளது.

தான் ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி என்ற ரீதியில் தனக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிப்பதை தவிர்க்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்கள் வரிப்பணத்தால் பராமரிக்கப்படும் ஜனாதிபதி செயலகம் மற்றும் அதன் வளங்கள், மக்களின் வரிப்பணம் ஊடாக சம்பளம் பெறும் பணிக்குழுவினர் உட்பட ஜனாதிபதி ஊடக பிரிவை பயன்படுத்தி தனது ஜனாதிபதி தேர்தல் கருத்திட்டத்திட்டத்துக்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து அவற்றை பிரச்சாரம் செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம், 1981 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க ஜனாதிபதியை தெரிவு செய்யும் சட்டம் மற்றும் 2023 ஆம் ஆண்டு 3 ஆம் இலக்க தேர்தல் செலவுகளை ஒழுங்குப்படுத்தல் சட்டம் வேண்டுமென்றே மீறப்பட்டுள்ளது.

அரச நிதியை முறைகேடான வகையில் பயன்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்படுகிறார்.தேர்தல் சட்டத்துக்கு அமைய செயற்படும் ஏனைய வேட்பாளர்களுக்கு இதனால் அநீதி இழைக்கப்படும் ஆகவே இவ்விடயம் குறித்து அவதானம் செலுத்துமாறு வலியுறுத்துகிறோம்.

– இராஜதுரை ஹஷான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *