வடக்கில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இவ்வாறானதொரு சூழ்நிலையில் தற்போது நாமனைவரும் ஒன்றிணைந்து அபிவிருத்திப் போரை ஆரம்பிப்போம்.
எதிர்வரும் 5 – 10 வருடங்களில் வடக்கை அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்றியமைப்பதே எமது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின் தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நீர் வழங்கல் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்த ஜனாதிபதி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டம் மற்றும் ‘யாழ். நதி’ மூலம் வடக்கின் குடிநீர் தேவைக்கு முழுமையாகத் தீர்வுகாணமுடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.
யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின்படி தாளையடி கடல் நீரை நன்னீராக்கும் நிலையமானது தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஏற்பாடுகளின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியின் குடிநீர்த்தேவையைப் பூர்த்திசெய்வதற்காக இலங்கை அரசாங்கம் 2011 ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பிரான்ஸ் அபிவிருத்தி வங்கி என்பவற்றின் உதவியுடன் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
தேசிய மட்டத்தில் 2.5 மில்லியன் நீர் இணைப்புகள் காணப்படும் நிலையில் இந்த திட்டத்தின்கீழ் மேலும் 60,000 இணைப்புக்கள் வழங்கப்படவுள்ளன.
இலங்கையின் வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 300,000 மக்களுக்கு சுத்தமான, பாதுகாப்பான குடிநீர் வழங்குவதும் 80,000 பேருக்கு சுகாதார வசதிகளை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
உப்பு நீக்கும் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் 2017 ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கைசாத்திடப்பட்டது. இதுவரை, இருபது உயரமான நீர் தொட்டிகள் அமைத்தல், 186 கி.மீ பரிமாற்ற குழாய்கள் மற்றும் 382 கி.மீ விநியோக குழாய்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
உப்புநீக்கும் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான பணிகள் 2021 ஜனவரியில் கையளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் மொத்தச் செலவு 266 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் சுகாதார பாதுகாப்புத் திட்டம் 2025 ஆம் ஆண்டின் இடைப்பகுதியில் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறுகையில்,
இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆரம்பிக்க காணி வழங்கிய மக்களுக்கு நன்றி கூறுகிறேன் தாளையடி பகுதிக்கு தனியானதொரு கிராம சேவகர் பிரிவை நிறுவுமாறு மக்கள் கோரியுள்ளனர். அதனை செய்யுமாறு ஆளுநருக்கு பணிப்புரை விடுப்பேன். இந்த சுத்திகரிப்பு நிலையம் யாழ்ப்பாணத்தின் குடிநீர் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வை வழங்கும்.
எதிர்காலத்தில் வளவை கங்கை நீர்த்திட்டத்தையும் ஆரம்பிப்போம். அதனால் பூநகரிக்கு நீர் கிடைக்கும். அதேபோல் யாழ். நதி நீர் திட்டத்தை ஆரம்பிப்போம். இந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் யாழில் நீர் பிரச்சினை இருக்காது. வடமராட்சி செழிப்பான பிரதேசமாக மாறும்.
இந்த நீருக்கு நாம் கட்டணம் செலுத்த வேண்டும். அதனால் சூரிய சக்தியைப் பயன்படுத்தி கட்டணத்தை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். இந்த பகுதிக்கு நீர் வழங்கல் முறைகளை செயற்படுத்தி நவீன விவசாயத்தை ஊக்குவிப்போம். நீருக்கு கட்டணம் செலுத்தும் பட்சத்தில் ஒவ்வொரு லீட்டரிலும் உச்ச பயனை அடைய வேண்டும்.
‘யாழ் நதி’ திட்டத்தின் ஊடாக பொருளாதாரத்தைப் பலப்படுத்த எதிர்பார்க்கிறோம். காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இந்தியாவுடன் கலந்தாலோசிக்கிறோம். சீமெந்து நிறுவனம் இருந்த இடத்தில் முதலீட்டு வலயமொன்று ஆரம்பிக்கப்படும். பூநகரியிலும் அதனை செய்வோம். பலாலியில் சுற்றுலா துறையை மேம்படுத்துவோம். காற்று, சூரிய சக்தி மூலம் பெருமளவில் இங்கு மின் உற்பத்தி செய்ய முடியும். அதனால் மேலும் பல பொருளாதார நன்மைகள் கிடைக்கும்.
அடுத்த 5 – 10 வருடங்களில் யாழ்ப்பாணம் அபிவிருத்தி அடைந்த மாவட்டமாக மாற்றப்படும். அதேநேரம் மத்திய அரசாங்கம் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்மாண
பணிகளை மேற்கொள்ளாமல் இருக்க தீர்மானித்துள்ளது. மாகாண சபையினால் அதனை செய்ய முடியும். எனவே நாம் அடுத்தபடியாக பொருளாதார யுத்தத்தை எதிர்கொள்ள ஆரம்பிப்போம். அதற்கான பணிகளை நாம் முன்னெடுக்க வேண்டும். வங்குரோத்து நிலையிலும் இந்த திட்டத்தை நிறைவு செய்ய உதவியவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
உத்தியோகபூர்வ கடன் வழங்குனர்கள், சீன எக்ஸிம் வங்கி, பிணைமுறி கடன் வழங்குநர்களுடன் உடன்பாடுகளை எட்டியுள்ளோம். அதனால் வெளிநாட்டுக் கடன்கள் எமக்கு கிடைக்கும். ஜப்பான் அபிவிருத்தி பணிகளை மீள ஆரம்பிப்பதாக உறுதியளித்துள்ளது. மற்றைய நாடுகளுடனும் அந்த இணக்கப்பாடுகளை ஏற்படுத்துவோம்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேசியபோது எட்டப்பட்ட உடன்பாடுகளை கைசாத்திடும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. பால் உற்பத்தி செயற்பாடுகளுக்காக அமுல், கார்கில்ஸ் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திவருகின்றோம். தற்போது நாட்டுக்குள் பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்தும் இதனை தக்கவைத்துக்கொள்ளவேண்டும். நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் வேளையில், யாழ்ப்பாணமும் பொருளாதாரத்தின் முக்கிய பகுதியாக மாறும்.
இந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டமைக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு நன்றி. தோhட்டப்பகுதிகளை கிராமங்களாக பிரகடனப்படுத்தும் பணிகளையும் அவரோடு இணைந்து முன்னெடுப்போம். எதிர்காலத்தில் இவ்வாறான பல பணிகளை செய்யவுள்ளோம் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.