ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை விட்டுப் பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் ஒன்றிணையுமாறு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று (07) புதன்கிழமை காலை இடம்பெற்ற “ 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் களமிறங்கவுள்ள வேட்பாளர் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பில்” ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் 1970ஆம் ஆண்டு அரசியலிற்குள் நுழைந்தேன். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருக்கிறேன். எனது அனுபவத்தின்படி கூறுகின்றேன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக எமது கட்சியின் சார்பில் நாமல் ராஜபக்ஷ போட்டியிடவுள்ளார்.
எனவே, கட்சியை விட்டுப் பிரிந்து சென்றவர்களை நாட்டிற்காகவும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்காகவும் கடந்த காலங்களைப் போன்று எம்முடன் இணைந்து செயற்பட நாம் அழைக்கின்றோம்.
இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில்,
என் மீது நம்பிக்கை வைத்துள்ள கட்சி உறுப்பினர்களுக்கு எனது மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல சவால்களுக்கு மத்தியில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தயாராகியுள்ளேன்.
எனவே, எமக்கு ஒத்துழைப்பு வழங்கக் கட்சியின் முன்னாள் உறுப்பினர்களை அன்புடன் அழைக்கின்றோம். எமது வெற்றி எமது கட்சியின் வெற்றி ஆகும். ஆகவே நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள், வெறுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு கட்சிக்காக நாம் ஒன்றிணைந்து செயற்படுவோம் என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ , ஜொன்ஸ்டன் பெர்னாண்டொ , ஜயந்த கொடகொட மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.