ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் புதன்கிழமையன்று (14) இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சுமந்திரனுக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை (10) இந்தச் சந்திப்புக்கான நேர ஒதுக்கீடு குறித்த தொலைபேசி உரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
இதன்போது மாகாண சபைகள் தேர்தல் திருத்தச்சட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் மாகாண சபைகளின் அதிகாரங்களை உறுதிப்படுத்துவதற்கான சட்ட திருத்தங்கள் பற்றி ஆராயப்படவுள்ளதாக ஜனாதிபதிக்கு நெருக்கமான தரப்புக்களின் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.
இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் சுமந்திரன் எம்.பிக்கும் இடையில் நடைபெறவிருந்த சந்திப்பு உயர்நீதிமன்றத்தில் ஹரீன், மனுஷவின் வழக்குத் தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளதாக விடுக்கப்பட்ட அழைப்பால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மீண்டும் இந்த வார இறுதிக்குள் இந்த சந்திப்பு மீண்டும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோன்று, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமாரவுடனான சந்திப்பொன்றிலும் சுமந்திரன் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்த சந்திப்பு தொடர்பிலான எந்த உறுதிப்படுத்தல்களையும் செய்துகொள்ள முடியவில்லை.
ஆர்.ராம்