எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேர்தல் கண்காணிப்புக்காக பல சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு 337 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் தேர்தல் மற்றும் அது தொடர்பான கடமைகள் குறித்து நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நேற்றுமுன்தினம் (11) மாலை இடம்பெற்ற விசேட விழிப்புணர்வுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
பொதுநலவாய தேர்தல் கண்காணிப்புக் குழு, அன்சரல் தேர்தல் கண்காணிப்பு நிறுவனம், தெற்காசிய தேர்தல் நிபுணத்துவ மன்றம் என்பன தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை வருவதற்குத் தேவையான அனுமதியை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன.
அதற்குத் தேவையான அடிப்படைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அத்துடன், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்களும் ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதில் ஈடுபட்டுள்ளன.
தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இதுவரை ஏறத்தாழ முந்நூற்றுமுப்பது முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன், அவற்றில் பெரும்பாலானவை அரச சொத்துகளைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பானவையாகும்.
உத்தியோகபூர்வ விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேர்தல் சட்டங்களை மீறுபவர்கள் மற்றும் பொதுச் சொத்துகளை அபகரிப்பவர்களுக்கு எதிராக சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தேர்தல் ஆணையம் கடமைப்பட்டுள்ளது என்றார்.